ஆறாம் தந்திரம்
1 சிவகுரு தரிசினம்
1573
பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற்
சித்தம் இறையே சிவகுரு வாமே.
1
1574
பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த
தாசற்ற சற்குரு அம்பலமாமே.
2
1575
சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும்மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.
3
1576
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.
4
1577
தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே.
5
1578
சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணிவாரே.
6
1579
உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருளன்றி யாரறி வாரே.
7
1580
சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.
8
1581
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.
9
1582
சித்த யாவையுஞ் சிந்தித் திருந்திடும்
அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே.
10
1583
தானந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி யங்கித் தனிச்சுட ராமே.
11
1584
திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா தருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே.
12
1585
பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாஞ் சிவோகமே சேர்தலான்
முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை
சத்தி யருள்தரில் தானெளி தாமே.
13
1586
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே.
14
1587
சிவமான ஞானந் தெளியவொண் சித்தி
சிவமான ஞானந் தெளியவொண் முத்தி
சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச்
சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே.
15
1588
அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே.
16
1589
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.
17
