ஆண்ட்ரியஸ் வைசாலியஸ்
அறிவியல் என்பது நாள் தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது . காலங்காலமாக உண்மை என்று கருதப்பட்டு கடைபிடிக்கப்படும் பல கோட்பாடுகளை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பொய்ப்பித்து வருவதை நாம் இன்றும் கூட நடைமுறையில் காண்கிறோம். இப்போது சரி என்று கருதப்படும் உண்மைகள் பிற்காலத்தில் தவறு என்று நிரூபிக்கப்படலாம். மொத்தத்தில் அறிவியல் என்பதின் நோக்கமே உண்மை அறிதல் ஆகும்.
மருத்துவத் துறையிலும் இத்தகைய பழமைவாதக் கருத்துகளே உண்மை என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாக புதிய சிந்தனைகள் முளைவிட ஆரம்பித்தன. பழைய கோட்பாடுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அத்தகைய புரட்சிகரமான ஆய்வுகளை மேற்கொண்டவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளரும் மருத்துவருமான ஆண்ட்ரியஸ் வைசாளியஸ்.
ஆண்ட்ரியஸ் வைசாளியஸ். கி.பி.1514 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த " ப்ரசெல்ஸ்" நகரில் மருத்துவக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஐந்தாம் சார்லஸ் மன்னரிடம் மருத்துவராகப் பணி ஆற்றினார். மருத்துவப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்ததால் வைசாளியஸ் சிறு வயதில் இருந்தே மருத்துவத் துறையில் ஈடுபாட்டுடன் இருந்தார். அந்த ஈடுபாடு அவரை அந்தச் சின்னஞ்ச் சிறு வயதிலேயே எலி, நாய், பெருச்சாளி போன்றவைகளை அறுத்து, பரிசோதனை செய்வதில் ஈடுபடுத்தியது.
ஆண்ட்ரியஸ் வைசாளியஸ் தனது தந்தையின் செல்வாக்கால் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களான பாரிஸ் பல்கலைக் கழகம், லூவேன் பல்கலைக் கழகம், பாடுவா பல்கலைக் கழகம் போன்ற பல்கலைக் கழகங்களில் சேர்ந்து படித்தார். பாடுவா பல்கலைக் கழகத்தில் அவர் படித்துக் கொண்டு இருந்த காலத்திலேயே, அவரது மருத்துவத் துறை ஈடுபாடு, நேரம் தவறாமை போன்ற குணங்களால் ஈர்க்கப்பட்ட அக்கல்லூரி நிர்வாகம் அவரை அங்கேயே பேராசிரியராகப் பணி புரியும் வாய்ப்பை அளித்தது. சந்தோஷத்துடன் அப்பணியை சிரம் மேற்கொண்டு செய்தார் வைசாளியஸ்.
அவர் பிறப்பதற்கு 1300 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, மகத்தான செல்வாக்கை மருத்துவத் துறையில் உருவாக்கிய திரு. கேலன் அவர்களின் மருத்துவக் குறிப்பில் உள்ள தவறுகளை கண்டு பிடித்து. அதனை சுட்டிக் காட்டி, திருத்தி எட்டு தொகுப்புகளாக வெளி இட்டார். அதன் மூலம் திரு. கேலன் அவர்களின் ஆராய்ச்சியில் தவறுகள் பல இருப்பதை உலகிற்கு எடுத்து இயம்பினார். இதனால், மருத்துவத் துறையில் அன்றைய கால கட்டத்தில் இருந்த சில பழம் பெருச்சாளிகள் கொதிப்படைந்தனர். அந்த அறிவீனர்கள் மக்களை தூண்டி விட்டு, ஆண்ட்ரியஸ் வைசாளியஸ் அவர்களுக்கு பல துன்பங்களை ஏற்படுத்தினர்.
ஆனால், இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாத வைசாளியஸ் உண்மையை மட்டுமே எழுதினார். சத்தியத்தை மட்டுமே பேசினார்.அவரது திறமையைக் கண்டு வியந்த அந்நாட்டு அரசன் தன் மகனான இரண்டாம் பிலிப்பின் உடலைப் பாதுகாக்கும் பணியை அவரிடம் ஒப்படைத்தான். அந்த நேரடிப் பணியை ஏற்றுக் கொண்ட பிறகும், வைசாளியஸ் தனது மருத்துவ ஆராய்ச்சியை தொடர்ந்து செய்தார். அக்காலத்தில் மத குருமார்கள் மனித உடலை அறுத்து ஆராய்ச்சி செய்வதை தெய்வ குற்றமாகவே கருதினர். திரு.கேலன் அவர்கள் கூட மனிதக் குரங்குகளை கண்டு பிடித்து, கொன்று அதன் உடலை பிரித்தே, தனது ஆராய்ச்சிக் கட்டுரையை உலகிற்குத் தந்தார். ஆனால் வைசாளியஸ், அப்படிச் செய்ய விரும்ப வில்லை, அவர் மிகச் சரியான ஆய்வுக் கட்டுரையை உலகிற்குத் தர விரும்பினார். அதற்காக இடுகாட்டில் இருந்த பிணங்களை இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் தோண்டி எடுத்து, மறைவிடத்திற்கு கொண்டு சென்று அதனை அறுத்துப் பார்த்து, இவ்வாறாக தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார். அதன் விளைவாக பல ஆராய்சிக் கட்டுரைகளை உலகிற்குத் தந்தார். ஆனால், வைசாளியஸ் அவர்களின் இச்செயலை எப்படியோ அறிந்து கொண்ட மத குருமார்கள், வைசாளியஸ் செய்த குற்றத்திக்காக அவருக்கு மரண தண்டனை விதித்தனர். ஆனால், அவரின் மேல் இருந்த மரியாதையால் அந்நாட்டு அரசன் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அவரது மரண தண்டனையை ரத்து செய்து, சிறைக்கு மட்டும் அனுப்பினான். பின்னர், விசாரணையின் போது வைசாளியஸ் நாடு கடத்தப்பட்டார். கடைசியில் அந்த அறிவியல் மேதை கி.பி. 1564 ஆம் ஆண்டு, பேர் தெரியாத ஒரு ஊரில் அனாதையாக செத்துக் கிடந்தாராம்.
