ஆண்டொனி லாரண்ட் லவாஷியர் - 1

ஆண்டொனி லாரண்ட் லவாஷியர் - 1

bookmark

ஆண்டொனி லாரண்ட் லவாஷியர், விஞ்ஞானிகள் வரிசையில் இன்னொரு மாமேதை. அக்காலத்தில் மூட நம்பிக்கை ஓங்கி இருந்தது. எல்லாம் தெய்வத்தின் அருளால் தான் நடக்கிறது என மக்கள் நம்பினர். மக்களை அப்படியே நம்பவைத்து பணம் பறித்தனர். அந்த எத்தர்களின் பித்தலாட்டங்களைத் தோல் உரித்துக் காட்டி, அறியாமையில் இருந்து அவர்களை தனது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் தட்டி எழுப்பிய மாமேதை லாரண்ட் லவாஷியர். தனிமம் என்பதற்கு இலக்கணம் கூறியவர் இவர். பொருளாதாரம், விவசாயம் போன்றவற்றில் புரட்சிகளை செய்தவர். பொறுப்பார்களா? மத வெறியர்கள், இறுதியில் அவர் மேல் பொய் குற்றம் சாற்றி மரண தண்டனை விதித்தனர்.

லவாஷியர் கி.பி.1743 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பிளாரன்ஸ் என்னும் மாநிலத்தில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே அவரது தாயார் இறந்து விட்டார்கள், அதனால் அவரது அத்தை வீட்டில் தான் வளர்ந்தார் அவர். ஆனால், எந்த அத்தை, பெற்ற தாய் போல உலகத்தில் பிள்ளையை கவனிப்பார்கள். லவாஷியர் அவர்களும் அந்த நிலையில் தான் அப்போது இருந்தார். மெலிந்த உருவத்துடன் காணப்பட்டார், வயிற்று உபாதைகள் வேறு அவருக்கு இருந்தது. எப்போதும் மருத்துவச் செலவுகள். இப்படித் தான் அவரது சிறு வயது வாழ்க்கை கழிந்தது.

லவாஷியரின் தந்தை ஒரு சிறந்த சட்ட வல்லுநர். அதிலும், உயர் குடியில் பிறந்ததால் அந்நாட்டு மன்னருக்கு மிகவும் நெருக்கமானவர்.அவரது ஆசை தனது மகனையும் சிறந்த சட்ட வல்லுனராக மாற்ற வேண்டும் என்பது தான். லவாஷியரும், தந்தையின் விருப்பப்படி சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயில ஆரம்பித்தார். கல்லூரில், அக்காலத்தில் மாணவர்களின் திறமையை வளர்க்க பலதரப்பட்ட வகுப்புகள் எடுக்கப்பட்டது. அதில் ஒரு நாள், ஒரு வேதியியல் ஆசிரியர் ஒருவர், வேதியியல் பாடம் பற்றி சிறப்பாக சொற்பொழிவு செய்தார். அன்றைய தினம் முதல் லவாஷியர் மனமும் வேதியியல் துறையில் ஈடுபட ஆரம்பித்தது.அதனால், எப்போதும் நூலகத்திலேயே இருப்பார் லவாஷியர், அறிவியல் நூல்களை ஒன்று விடாமல் எடுத்துப் படிப்பார்.குறிப்புகள் எடுப்பார். அச்சமயத்தில் தான் நில நூல் அறிஞர் "ஜூன் கெட்டார்டு" என்பவருடன் லவாஷியருக்கு நட்பு ஏற்பட்டது.

லவாஷியரின் திறமையைக் கண்ட அவர் துணை ஆய்வாளராக சேர்த்துக் கொண்டார். அச்சமயத்தில் ஜூன் கெட்டார்டுவை அந்நாட்டு அரசாங்கம் நாட்டின் கனிவளம், நிலயியல் விவரம் போன்றவைகளைக் கொண்ட தேசிய வரை படத்தை வரையுமாறு கேட்டுக் கொண்டு இருந்தது. அதனால் லவாஷியரை உதவிக்கு அழைத்துக் கொண்டு 1767 ஆம் ஆண்டு நில வரைபடங்களைச் சேகரிக்க தனது பயணத்தை தொடர்ந்தார். லவாஷியர் பயணத்தின் போது கெட்டார்டு அவர்களுக்குப் பேர் உதவியாக இருந்தார். அதனால், தனக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களையும் லவாஷியருக்குக் கற்றுக் கொடுத்தார். பிறகு பாரிஸ் திரும்பிய லவாஷியருக்கு அப்பயணம் அவரது வாழ்க்கையிலேயே மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அது எப்படி எனில், அப்போது பிரஞ்சு அரசாங்கம் தங்களது பிரான்ஸ் நாட்டை அழகு படுத்த நினைத்தது. அதன் படி பாரீசை எந்த முறையில் அழகு படுத்தலாம். எவ்வகையில் மாற்றி அமைக்கலாம் என்ற வரைபடத்தை வரைந்து அனுப்புபவர்களுக்குப் பிரஞ்சு விஞ்ஞானக் கழகம் பாராட்டிப் பரிசளிக்கும் எனவும், நல்ல வரைபடத்திற்க்குத் தங்கப்பதக்கம் அளிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. லாவாஷியர் இதனைக் கேள்விப்பட்டு, தனக்கு முன் அனுபவம் இருந்த காரணத்தால் ஒரு அழகிய வரைபடத்தை வரைந்து பிரஞ்சு அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தார். அவரது அந்த வரைபடத்தை பார்த்த பிரஞ்சு அரசாங்கம், அவரது திறமையைக் கண்டு வியந்ததுடன், அவரைப் பாராட்டி தாங்கள் அறிவித்தபடி தங்கப் பதக்கத்தை அவருக்கு அளித்தது.

அத்துடன் அவரது திறமையை பயன் படுத்திக் கொள்ள நினைத்த அந்நாடு, அவரை நிலவரித் தீர்வுகளை வசூல் செய்யும் அதிகாரியாக நியமித்தது. லவாஷியரும், தனக்குக் கொடுக்கப் பட்ட வேலையை மேலதிகாரி பாராட்டும் படி செய்தார்.பணி நிமித்தமாக அவரது மேலதிகாரியின் வீட்டிற்கு லவாஷியர் அடிக்கடி சென்று வந்ததால்,அவரது மகள் "அன்னி பெய்ரெட்டுடன்" நட்பு ஏற்பட்டு அது காதலாக பரிமாணம் அடைந்து இறுதியில் வெற்றியுடன் அவர்களது திருமணத்தில் முடிந்தது. அன்னி பெய்ரெட் வசதியான வீட்டில் வளர்ந்து இருந்தாலும், லவாஷியரின் அந்தக் குறைவான சம்பளத்தில் வாழ்க்கை நடத்தக் கற்றுக் கொண்டாள். லவாஷியர் அவரது வருமானத்தில் ஒரு பகுதியை குடும்பத்திற்கு தருவார், மறு பகுதியை அவரது அறிவியல் ஆய்வுக்கு செலவு செய்வார். இதனால் வீட்டில் பொருளாதார நிலை மிகவும் மோசமாகத் தான் அவர்களுக்கு இருந்து வந்தது. பெண்ணைப் பெற்ற அந்த தந்தையால் தனது மகளின் நிலையைப் பார்க்க முடியவில்லை. தனது பதவியைப் பயன்படுத்தி லவாஷியருக்கு ஆயுத சாலையில் மேலாளர் பதவியைப் பெற்றுத் தந்தார். இதனால் அவர்கள் குடும்பச் செலவுக்கு போதிய வருமானம் கிடைத்தது. இருந்தாலும் லவாஷியர் அவரது அறிவியல் ஆய்வுப் பணியை நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்து வந்தார். அந்த நேரத்தில் பிரிஸ்ட்லே, பிராங்களின் போன்ற அறிஞர் பெரு மக்களின் நட்பும் லவாஷியருக்குக் கிடைத்தது.ஜோசப் பிரிஸ்ட்லி குறையிலா வாயு ஒன்றைக் கண்டறிந்தார்.லவாஷியர் அந்த வாயுவுக்கு " ஆக்சிஜென்" எனப் பெயர் இட்டார் (அதாவது ஆக்சஸ் என்றால் அமிலம் என்று பொருள், ஜென்னன் என்றால் இயற்றுதல் என்று பொருள்). இந்த இரண்டையும் சேர்த்து "ஆக்சிஜென்" எனப் பெயர் வைத்தார். மேலும் தனது பலவித சோதனைகளின் விளைவாக மனித உடலில் அடிப்படையாக இருக்கும் வெப்பத்திற்க்குக் காரணம் உடலில் நடைபெறும் " எரிதல்" என்ற சக்தியால் என்பதை மக்களுக்கு புரியும் படி விளக்கினார். காவெண்டிஷ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த எரி இயல் வாயுவை மேலும் ஆராய்ந்து அதற்கு ஹைட்ரஜன் எனப் பெயர் இட்டார் ( இதில் ஹைட்ரோ என்றால் நீர், ஜென்னன் என்றால் இயற்றுதல் ஆக, இந்த இரண்டையும் சேர்த்து ஹைட்ரஜன் என்று பெயர் இட்டார்) மேலும் தண்ணீர் என்பது ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் சேர்ந்த கூட்டுப் பொருள் என்பதை கண்டு பிடித்தார். இதற்கு ஆதாரமாக " ஹென்றி காவெண்டிஷ்" என்பவரின் ஆய்வுக் கட்டுரையை சுட்டிக் காட்டினார்.