ஆண்டன் பாவ்லோவிச் செக்கோவ் - 1
ஆண்டன் பாவ்லோவிச் செக்கோவ் ஓர் உருசிய சிறுகதை எழுத்தாளரும், நாடகாசிரியரும் ஆவார். இவர், உலக இலக்கியத்தில் மிகப் பெரும் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவராவார். 32 மொழிகளில் அவரின் சிறுகதைகள் வாசிக்கப் பட்ட வண்ணம் உள்ளன. மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். அப்பா பலசரக்குக் கடை வைத்து இருந்தார். எப்போது பார்த்தாலும் இவரை புண்படுத்திக் கொண்டும், அடித்துக் கொண்டும் இருப்பார். இவரை மட்டும் அல்ல, இவரது சகோதரர்கள் அனைவருக்கும் கூட இதே நிலை தான். அதன் காரணமாக செகாவின் அண்ணன்கள் குடிகாரர்களாகவும், பெண் பித்தர்களாகவும் மாறிப் போயினர்.
தந்தையின் கண்டிப்பு மற்றும் அவரது வக்கிரச் செயல்பாடுகள் காரணமாக ஆண்டன் செகாவால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் வகுப்பில் ஆசிரியர்களின் கோபத்துக்கும் ஆளானார் ஆண்டான் செகாவ். ஆனால், இந்த நிலையிலும் அவர் இந்தப் பரந்த உலகத்தை நேசித்தார். தந்தை வாங்கிய அதீத கடன்களை தானே கஷ்டப்பட்டு உழைத்து அடைத்தார். இதனால் அவரது வாழ்க்கையின் பெரும் பகுதி கடன்காரர்களின் தொல்லையில் கழிந்தது. பிற்பாடு அவருக்கு அரசு ஆதரவு கிடைத்தது , அரசின் உதவியால் மருத்துவம் படித்தார். அதில் கைதேர்ந்தார்.
" இலவசமாக பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்" என்ற பைபிளின் வாசகத்தால் கவரப்பாட்டார். அதன் காரணமாக கிராமம் , கிராமமாகப் போய் இலவச மருத்துவ உதவிகள் செய்தார். ஆனால், ஆண்டன் செகாவ் வாழ்க்கையில் கடவுள் வேறு ஒரு திட்டத்தை வைத்துக் இருந்தார்.
தனது வறுமையைப் போக்கிக் கொள்ள முதன் முதலில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். காலப் போக்கில் எழுதுவதில் தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டார், ஆண்டன் செகாவ். தனது சிறு கதைகளில் சமூகத்தின் வழிகளையும், சாடல்களையும் மனிதர்களின் தனிமையையும் பதிவு செய்தார்.
"வாழ்க்கை தான் எல்லாவற்றையும் விடப் பெரியது; தனிமையில் இருப்பதை விட வாழ்ந்து மடிவது மேலானது. இணைந்து வாழ்தலே பெரிது" என்றார். அவரது இந்த வார்த்தையை மெய்பிக்க சைபீரியா சென்று கொடிய காச நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.கொடிய குற்றவாளிகளை சந்தித்து அவர்களுக்குள்ளும் மனிதத்தன்மை உள்ளது என்று வியந்தார். இதே போல ஒரு மறை ஷக்லைன் தீவில் பெரிய திறந்தவெளி சிறையில் அந்த குற்றவாளிகள் பட்ட துன்பங்களை , கொண்டிருந்த உணர்வுகளை “A Journey to the end of the Russian Empire” என்கிற பெயரில் நூல் ஆக்கினார்.
ஆண்டன் செக்காவ் அவர்களின் திருமண வாழ்க்கை கூட அவருக்கு நிறைய சோதனை நிறைந்ததாகத் தான் இருந்து வந்தது. ஒல்கா என்கிற அவரது முதல் மனைவி கருச் சிதைவு தனக்கு ஏற்பட்ட காரணத்துக்காக ஆன்டன் செகாவ் அவர்களை விட்டுப் பிரிந்தாள். அதற்குப் பின் காதலித்த அவரது காதலியான லிடியா என்ற பெண் கூட அவருக்கு துரோகம் செய்து விட்டு, அவரது நண்பரை மணந்து கொண்டாள்.
இவர் வாழ்ந்த காலத்தில், இவர் எழுதிய கதையை ஆதரித்தவர்களை விட மிகவும் அதிகமாக கேலி செய்து விமர்சித்தவர்கள் தான் அதிகம். இவரது கதைகள் ஒன்றும் பெறாதவை என்று கூட சிலர் வீசி எறிந்தனர். ஏன், இவரது மரணத்தின் போது கூட செகாவின் உடல் ஒரு மீன் பெட்டியில் தான் வந்து இறங்கியது . இவரது மரண ஊர்வலத்தில் வெறும் எண்பது பேர் மட்டுமே கலந்து கொண்டு இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் என்றாலும் , காலம் இவரைக் கண்டு கொள்ளத் தயங்கவில்லை.
ஆண்டன் செகாவ், இவரது நாடகாசிரியர் பணிக்காலத்தில் இவர் கடற்புறா (The Seagull), அங்கிள் வான்யா (Uncle Vanya), மூன்று சகோதரிகள் (Three Sisters), செர்ரிப் பழத்தோட்டம் (The Cherry Orchard) ஆகிய நான்கு ஆக்கங்களை உருவாக்கினார். இவரது சிறந்த சிறுகதைகள் பிற எழுத்தாளர்களாலும், திறனாய்வாளர்களாலும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. தனது இலக்கியத்துறைப் பணிக்காலத்தின் பெரும்பகுதியில் அவர் மருத்துவத் தொழில் புரிந்து வந்தார். "மருத்துவம் எனது சட்டபூர்வமான மனைவி, இலக்கியம் எனது வைப்பாட்டி" என அவர் ஒரு முறை குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
1896 ஆம் ஆண்டில் இவரது முதல் நாடகமான கடற்புறா படுதோல்வியடைந்த போது, செக்கோவ் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். பின்னர், கான்சிட்டாண்டின் தாலின்சிலாவிசிக்கியின் மாசுக்கோ கலை அரங்கில் அரங்கேறியபோது இது பெரும் புகழ் பெற்றது. இதன் பின்னரே இவரது மற்ற மூன்று நாடகங்களும் எழுதப்பட்டன. மரபுவழி நடிப்புக்குப் பதிலாக "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், உரைகளுக்குள் ஆழ்ந்த வாழ்க்கையையும் கொடுத்ததனால், இந்த நான்கு நாடகங்களும் நடிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்தன.
செக்கோவ் தான் முதலில் எழுதிய கதைகளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால், அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார். இவரது கதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
