அமங்கலி

வாழயிலை கொண்டு-ஒங்க
வளசலுக்கே போனாலும்
வாழலைக்குச் சாதமில்லை-ஒங்க
வளசலோட ஆசையில்ல
தேக்க இலைகொண்டு
தெருவோட போனாலும்
தேக்கிலைக்குச் சாதமில்லை-எங்க
தெருவோட ஆசையில்ல
அல்லியும் தாமரையும்
அடரிப் படர்ந்தாலும்
அல்லி பாக்க வந்தவுக-என்னை
அசநாட்டார் என்பாக
முல்லையும் தாமரையும்
முறுக்கிப் படர்ந்தாலும்
முல்லை பாக்க வந்தவுக-எனை
மூதேவி என்பாக
படியில் அரிசி கொண்டு
பழனிமலை போனாலும்
பழனிமலைப் பூசாரி-எனக்கு
பலனும் இல்லை என்பாரு
சொளவு அரிசி கொண்டு
சுருளிமலை போனாலும்
சுருளிமலைப் பூசாரி-எனக்கு
சுகமில்லை என்பாரு
-----------
விதவை வாழ வழியற்றவள் என்பது மட்டுமல்ல. அவள் ஓர் உயிருள்ள பிணம். மங்கல நாட்கள், திருவிழாக்கள், மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் பண்டிகைகள் இவற்றில் அவள் ஒதுங்கியிருக்க வேண்டும். அவள் எதிரே வந்தால் தீயநிமித்தம்; விதவை தாயாக இருந்தாலும், மங்கல நாட்களில் ஒதுங்கியே இருக்க வேண்டும். இதுவே அவளை உயிரோடு வாட்டி வதைப்பது. ஒரு குழந்தையிருந்தால் இவற்றையெல்லாம் மறக்க அது துணை செய்யும்.குழந்தையும் அவளுக்கி்ல்லை.அவள் துயரத்தை அளவிட முடியுமா? குழந்தைக்குச் சொத்தில் பங்குண்டு. அவன் உணர்வுக்கு இனியவன் மட்டுமல்ல, வாழ்க்கைக்கு வழி உண்டாக்குபவன். அவனை வைத்துக் கொண்டு தானும் வாழலாம். தனியே இருக்கும் விதவையை மைத்துனன்மார் விரட்டிவிட்டால் என்ன செய்வது? கோர்ட்டில் நியாயம் கிடைக்குமா? குழந்தை இருந்தால் நியாயமுண்டு. இல்லாவிட்டால் நியாயமில்லை. பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாதிருக்கும் நிலையில், பெண்களுக்கு நேரும் துயரநிலையை இவள் நம் கண்முன் கொண்டு வருகிறாள்.
மஞ்சணத் தொந்தியில
மைந்தன் பிறந்தாக்க
மைந்தனக்குப் பங்குண்டும்
மதுரைக் கோட்டிலேயும் நியாயமுண்டும்
மஞ்சணத் தொந்தியில
மைந்தன் பிறக்கலியே
மைந்தனுக்குப் பங்குமில்ல
மதுரைக் கோட்டுலயும் ஞாயமில்லை
குங்குமத் தொந்தியில
குழந்தை பிறந்தாக்க
குழந்தைக்குப் பங்குமுண்டும்-மதுரைக்
கோட்டுலயும் நியாயமுண்டும்
குங்குமத் தொந்தியிலே
குழந்தை பிறக்கலயே
குழந்தைக்குப் பங்குமில்ல-மதுரைக்
கோட்டுலயும் நியாயமில்ல
மஞ்ச வச்சாப் பிஞ்செறங்கும்
மணல் போட்டா வேர் எறங்கும்
மந்திரிமார் பெத்தமக
மலடி எனும் பேரானேன்
இஞ்சி வச்சாப் பிஞ்செறங்கும்
எருப்போட்டா வேர் எறங்கும்
இந்திரனார் பெத்த மக
இருசி யெனும் பேரானேன்.
வட்டார வழக்கு: மஞ்சி-மேகம் ; மா-மாமரம் ; சிணுக்குவரி- கூந்தல் சிக்கலை எடுக்கும் இரும்பு ஊசி ; குண்ணிருச்சே-குன்றி விட்டதே (பேச்சு) ; மத்தொரு-மற்றும் ஒரு (பேச்சு) ; எடத்தே-இடத்தை ; பெறக்கி-பொறுக்கி (பேச்சு) ; நிண்ணெரியும்-நின்று எரியும் (பேச்சு) ; வளசல்-குடும்ப வீடுகளுள்ள வளைவு ; தேக்கிலை-மலையடிவாரக் கிராமங்களில் தேக்கிலையில் உணவு படைப்பார்கள் ; அடரி-அடர்ந்து; இருசி-மலடி.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி,நெல்லை.
----------