திருவாரூர்

bookmark

பண் - தக்கேசி

திருச்சிற்றம்பலம்

603

பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப்

போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்

பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா

எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.59.1

604

கட்ட மும்பிணி யுங்களை வானைக்

காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கைவெந் நோய்களை வானை

விரவி னால்விடு தற்கரி யானைப்
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை

வாரா மேதவி ரப்பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.59.2

605

கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்

கலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடிப்
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்

பகலுங் கங்குலும் ஆகிநின் றானை
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை

உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
ஆர்க்கின் றகட லைமலை தன்னை

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.59.3

606

செத்த போதினில் முன்னின்று நம்மைச்

சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே

மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே
முத்தன் எங்கள்பி ரானென்று வானோர்

தொழநின் றதிமில் ஏறுடை யானை
அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.59.4

607

செறிவுண் டேல்மனத் தாற்றெளி வுண்டேல்

தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்
மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்

வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறிவண் டாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றைப்

பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை
அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.59.5

608

பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று

பொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்

வாரா மேதவிர்க் கும்விதி யானை
வள்ளல் எந்தமக் கேதுணை என்று

நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்
அள்ள லங்கழ னிப்பழ னத்தணி

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.59.6

609

கரியா னைஉரி கொண்டகை யானைக்

கண்ணின் மேலொரு கண்ணுடை யானை
வரியா னைவருத் தங்களை வானை

மறையா னைக்குறை மாமதி சூடற்
குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்

ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்
கரியா னைஅடி யேற்கெளி யானை

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.59.7

610

வாளா நின்று தொழும்அடி யார்கள்

வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாணா ளும்மலர் இட்டுவணங் கார்

நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்

கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி
ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.59.8

611

விடக்கை யேபெருக் கிப்பல நாளும்

வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்
கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்

கண்கு ழிந்திரப் பார்கையி லொன்றும்
இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்

சடையா னைஉமை யாளையோர் பாகத்
தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.59.9

612

ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட

உச்சிப் போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லையிருள் தன்னைப்

பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக்
கட்டி யைக்கரும் பின்றெளி தன்னைக்

காத லாற்கடல் சூர்தடிந் திட்ட
செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ

ஆரூ ரானை மறக்கலு மாமே.

7.59.10

613

ஓரூ ரென்றுல கங்களுக் கெல்லாம்

உரைக்க லாம்பொரு ளாயுடன் கூடிக்
காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை

முடியன் காரிகை காரண மாக
ஆரூ ரைம்மறத் தற்கரி யானை

அம்மான் றன்றிருப் பேர்கொண்ட தொண்டன்
ஆரூ ரன்னடி நாயுரை வல்லார்

அமர லோகத் திருப்பவர் தாமே.

7.59.11

திருச்சிற்றம்பலம்