கற்பு மேம்பாடு

bookmark

தன்கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன் 
      தனக்கிணங் காத நிறையாள், 
தழற்கதிர் எழாமலும் பொழுதுவிடி யாமலும் 
      சாபம் கொடுத்த செயலாள், 
மன்னிவளர் அழல்மூழ்கி உலகறிய வேதனது 
      மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள், 
மைந்தனைச் சுடவந்த இறைவன் தடிந்தவடி 
      வாள்மாலை யான கனிவாள்,
நன்னதி படிந்திடுவ தென்னஆர் அழல்மூழ்கி 
      நாயகனை மேவு தயவாள், 
நானிலம் புகழ்சாலி, பேர்பெறு நளாயினி, 
      நளினமலர் மேல்வை தேகி 
அன்னமென வருசந்த்ர மதிதுரோ பதையென்பர் 
      ஆதியே! அருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!