திருச்செங்காட்டங்குடி – திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
833
பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி
அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.1
834
துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட
அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்
ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற
செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.2
835
உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை
உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்
பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும்
முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்
முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.3
836
கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.4
837
நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை
நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை
வியன்கெடில வீரட்டம் மேவி னானை
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்
செஞ்சினத்த திரிசூலப் படையான் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.5
838
கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்
கடவூரில் வீரட்டங் கருதி னானைப்
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்
பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்
பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று
சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.6
839
எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை
ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம்
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்
புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்
பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்
தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.7
840
கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்
கற்றார்கள் உற்றோருங் காத லானைப்
பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்
பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.8
841
அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னை
அலைகடலில் ஆலால மமுது செய்த
கரியதொரு கண்டத்துச் செங்க ணேற்றுக்
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.9
842
போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப்
புறம்பயமும் புகலூரும் மன்னி னானை
நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப்
பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்
பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடியச் செற்ற
சீரரவக் கழலானைச் செல்வன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
6.84.1
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கணபதீசுவரர், தேவியார் - திருக்குழல்மாதம்மை.
திருச்சிற்றம்பலம்
