திருக்கயிலாயத்திருமலை – போற்றித்திருத்தாண்டகம்

bookmark

திருச்சிற்றம்பலம்

572

பாட்டான நல்ல தொடையாய் போற்றி

பரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி

தூமாலை மத்த மணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி

அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.1

573

அதிரா வினைக ளறுப்பாய் போற்றி

ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி

சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி
எதிரா உலக மமைப்பாய் போற்றி

என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.2

574

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி

செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி

ஆகாச வண்ண முடியாய் போற்றி
வெய்யாய் தணியா யணியாய் போற்றி

வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.3

575

ஆட்சி யுலகை யுடையாய் போற்றி

அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி

சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மாட்சி பெரிது முடையாய் போற்றி

மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிது மரியாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.4

576

முன்னியா நின்ற முதல்வா போற்றி

மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி

ஏழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி

மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.5

577

உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி

உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி

ஏசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி

அறிவே அடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.6

578

எண்மேலும் எண்ண முடையாய் போற்றி

ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி

பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி

மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.7

579

முடியார் சடையின் மதியாய் போற்றி

முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி

சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியா ரடிமை அறிவாய் போற்றி

அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.8

580

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி

புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி

எண்ணா யிரநூறு பேராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி

நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

6.57.9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

6.57.10

திருச்சிற்றம்பலம்