தனித்திருவிருக்குக்குறள்

பொது - திருப்பதிகம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
(முதல் திருமுறையிற் போலப் பாடல் அடிகள் நான்காகக் கொள்ளப்படும்.)
422.
கல்லால் நீழல், அல்லாத் தேவை
நல்லார் பேணார், அல்லோம் நாமே.
01
423.
கொன்றை சூடி, நின்ற தேவை
அன்றி யொன்று, நன்றி லோமே.
02
424.
கல்லா நெஞ்சின், நில்லான் ஈசன்
சொல்லா தாரோ, டல்லோம் நாமே.
03
425.
கூற்று தைத்த, நீற்றி னானைப்
போற்று வார்கள், தோற்றி னாரே.
04
426.
காட்டு ளாடும், பாட்டு ளானை
நாட்டு ளாருந், தேட்டு ளாரே.
05
427.
தக்கன் வேள்விப், பொக்கந் தீர்த்த
மிக்க தேவர், பக்கத் தோமே.
06
428.
பெண்ணா ணாய, விண்ணோர் கோவை
நண்ணா தாரை, எண்ணோம் நாமே.
07
429.
தூர்த்தன் வீரம், தீர்த்த கோவை
ஆத்த மாக, ஏத்தி னோமே.
08
430.
பூவி னானுந், தாவி னானும்
நாவி னாலும், ஓவி னாரே.
09
431.
மொட்ட மணர், கட்ட தேரர்
பிட்டர் சொல்லை, விட்டு ளோமே.
10
432.
அந்தண் காழிப், பந்தன் சொல்லைச்
சிந்தை செய்வோர், உய்ந்து ளோரே.
11
திருச்சிற்றம்பலம்