திருமறைக்காடு

bookmark

பண் - பியந்தைக்காந்தாரம்

984    

பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தங்
கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாந்
திங்கள் சூடின ரேனுந் திரிபுரம் எரித்தன ரேனும்
எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே.    

01

985    

கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடை
ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவங்
கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத்
தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே.    

02

986    

நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்கு பொன்மார்பிற்
பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமோர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே.    

03

986    

ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே.    

04

987    

அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான்
மரவம் நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்காட்
டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே.    

05

989    

பல்லி லோடுகை யேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்
புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்
மல்கு வெண்டிரை யோதம் மாமறைக் காடது தானே.    

06

990    

நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்கு மத்தாகப்
பாகந் தேவரோ டசுரர் படுகடல் அளறெழக் கடைய
வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட
ஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே.    

07

991    

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்குத் தன்திரு விரலா லூன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே.    

08

992    

விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்
பண்டுங் காண்பரி தாய பரிசினன் அவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே.    

09

993    

பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள்
அரிய வாகவுண் டோ து மவர்திறம் ஒழிந்து நம்மடிகள்
பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே.    

10

994    

மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்
கையினாற் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார்போய்ப்
பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே.    

11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.

திருச்சிற்றம்பலம்