திருப்பனையூர்

bookmark

பண் - தக்கராகம்

393

அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.

1.37.1

394

எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
கண்ணின் றெழுசோ லையில்வண்டு
பண்ணின் றொலிசெய் பனையூரே.

1.37.2

395

அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானூர்
சிலரென் றுமிருந் தடிபேணப்
பலரும் பரவும் பனையூரே.

1.37.3

396

இடியார் கடல்நஞ் சமுதுண்டு
பொடியா டியமே னியினானூர்
அடியார் தொழமன் னவரேத்தப்
படியார் பணியும் பனையூரே.

1.37.4

397

அறையார் கழல்மே லரவாட
இறையார் பலிதேர்ந் தவனூராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையா ரொலிசெய் பனையூரே.

1.37.5

398

அணியார் தொழவல் லவரேத்த
மணியார் மிடறொன் றுடையானூர்
தணியார் மலர்கொண் டிருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே.

1.37.6

399

அடையா தவர்மூ வெயில்சீறும்
விடையான் விறலார் கரியின்தோல்
(*)உடையா னவனெண் பலபூதப்
படையா னவனூர் பனையூரே.
(*) உடையா னவனொண் பலபூத என்றும் பாடம்.

1.37.7

400

இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே.

1.37.8

401

வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே.

1.37.9

402

*அழிவல் லமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானூர்
பழியில் லவர்சேர் பனையூரே.
(*) அழிவில் லமணஃ தொடுதேரர் என்றும் பாடம்.

1.37.10

403

பாரார் *விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொன்மா லைகள்பத்தும்
ஊரூர் நினைவா ருயர்வாரே.
(*) விடையார் என்றும் பாடம்.

1.37.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சவுந்தரேசர், தேவியார் - பெரியநாயகியம்மை

திருச்சிற்றம்பலம்