திருவிடைமருதூர்

பண் - வியாழக்குறிஞ்சி
1185
மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே.
1.110.1
1186
தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே.
1.110.2
1187
படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை யெம்மிறையே.
1.110.3
1188
பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்
கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநகர் இடைமருதே.
1.110.4
1189
பொழிலவன் புயலவன் புயலியக்குந்
தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே.
1.110.5
1190
நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடைமருதே.
1.110.6
1191
நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொ டமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே.
1.110.7
1192
தருக்கின அரக்கன தாளுந்தோளும்
நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே.
1.110.8
1193
பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
வரியர வணைமறி கடற்றுயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே.
1.110.9
1194
சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியில் உரையவை பொருள்கொளாதே
அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநகர் இடைமருதே.
(*) ஓத்து என்பது வேதம்.
1.110.10
1195
இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொ டோ ங்குவரே.
1.110.11
திருச்சிற்றம்பலம்