ஹென்றி டூனன்ட்
ஹென்றி டூனன்ட் மனித நேயம் என்ற சொல்லின் மறு அர்த்தம் அவர்.சுவிட்சர்லாந்தில் உள்ள செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார் அவர்.இளவயதில் இருந்தே வியாபாரத்தில் அதிக ஈடுபாடைக் கொண்டு இருந்தார்.தனது வியாபாரத்தை விரிவு படுத்த நினைத்த அவர், அதற்கு பிரஞ்சு மன்னரின் ஒப்புதல் தேவைப் படவே, அவரைக் காணக் கிளம்பினார்.
அச்சமயத்தில் இத்தாலியில் உள்ள சோல்பெரினோ என்ற இடத்தில் பிரான்ஸ் மற்றும் சார்டீனீயாவின் கூட்டுப் படைகளுக்கும், ஆஸ்திரியப் படைகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து கொண்டு இருந்தது.ஒரே நாளில் அப்போரில் பதினைந்தாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர், இருபத்தைந்தாயிரம் வீரர்களுக்கு மேல் பலத்த காயமுற்றனர்.அவர்களது அலறலையும், பரிதாப நிலையையும் கண்ட ஹென்றி டூனன்ட், தான் வந்த நோக்கத்தையே மறந்து, காயம் அடைந்த வீரர்களுக்கு அங்கு வாழ்ந்த உள்ளூர் மக்களுடன் சேர்ந்து உதவினார்.
அப்போது தான் ஹென்றி டூனன்ட் அவர்களுக்கு மனதில் அந்த எண்ணம் வந்தது. " இந்த ஒரு போரிலேயே இவ்வளவு உயிர் சேதம் என்றால்.உலகத்தில் எத்தனை போர்கள் நடக்கிறது அவர்களுக்கு உதவ நிச்சயம் ஒரு பொதுவான அமைப்பு தேவை " என்று சிந்திக்கலானார். அந்த சிந்தனை செஞ்சிலுவை சங்கமாக உயிர் பெற்றது. தனது ஒட்டு மொத்த வருமானத்தையும் போட்டு அதனை நடத்தினார்.பல்வேறு நாடுகளை அதில் இணைத்தார். முழுக்க, முழுக்க செஞ்சுலுவை சங்கத்தில் இவர் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். இதனால் அவரது வியாபாரத்தை சரியாக அவரால் கவனிக்க முடியவில்லை. அதன் காரணமாக அவரது வியாபாரம் முழுமையாகப் படுத்தது. மிக மோசமான நிலைக்கு தள்ளப் பட்டார்.
அவரது நிலையை, அவர் எழுதிய கீழ்க்கண்ட அவரது வரிகளின் மூலமே அறிந்து கொள்ளலாம். "நான் ஓரிரு ரொட்டித் துண்டுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய சாயம் போன கோட்டை செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவி கேட்க போகும் பொழுது மையால் கருப்பாக்கி கொள்கிறேன். எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாக படுத்து இரவில் தூங்கிக் கொள்கிறேன்."
அவர் செய்த சேவைக்காக, அவருக்கு முதல் நோபல் பரிசு அறிவிக்கப் பட்ட பொழுது. அதில் அவருக்குக் கிடைத்த தொகையையும் கூட தான் துவங்கிய செஞ்சிலுவை சங்கத்தின் வளர்ச்சிக்கே அளித்து விட்டார். இது தேவையா என்று பிறர் பரிகசிக்க, ஒரே ஒரு அறையில் அனாதையாக வாழ்ந்தார், தான் கொண்ட கொள்கையில் மட்டும் தீர்மானமாக இருந்தார். அந்த அறையிலேயே இறந்தும் போனார். என்றாலும் இன்றைக்கும் அவரால் ஆரம்பிக்கப்பட்ட செஞ்சிலுவை சங்கம் பலரது உயிரை காப்பாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
