வேலூர்

bookmark

பாடல் 666
தனன தாத்தன தானா தானன 
தனன தாத்தன தானா தானன 
தனன தாத்தன தானா தானன ...... தந்ததான 


அதிக ராய்ப்பொரு ளீவார் நேர்படில் 
ரசனை காட்டிக ளீயார் கூடினும் 
அகல வோட்டிகள் மாயா ரூபிகள் ...... நண்புபோலே 

அசட ராக்கிகள் மார்மே லேபடு 
முலைகள் காட்டிகள் கூசா தேவிழும் 
அழகு காட்டிக ளாரோ டாகிலு ...... மன்புபோலே 

சதிர தாய்த்திரி வோயா வேசிகள் 
கருணை நோக்கமி லாமா பாவிகள் 
தருமு பேட்சைசெய் தோஷா தோஷிகள் ...... நம்பொணாத 

சரச வார்த்தையி னாலே வாதுசெய் 
விரக மாக்கி விடர்மு தேவிகள் 
தகைமை நீத்துன தாளே சேர்வதும் ...... எந்தநாளோ 

மதுரை நாட்டினி லேவாழ் வாகிய 
அருகர் வாக்கினி லேசார் வாகிய 
வழுதி மேற்றிரு நீறே பூசிநி .....மிர்ந்துகூனும் 

மருவு மாற்றெதிர் வீறே டேறிட 
அழகி போற்றிய மாறா லாகிய 
மகிமையாற் சமண் வேரோ டேகெட ...... வென்றகோவே 

புதிய மாக்கனி வீழ்தே னூறல்கள்
பகலி ராத்திரி யோயா ஆலைகள் 
புரள மேற்செல வூரூர் பாயஅ ...... ணைந்துபோதும் 

புகழி னாற்கடல் சூழ்பார் மீதினி 
லளகை போற்பல வாழ்வால் வீறிய 
புலவர் போற்றிய வேலூர் மேவிய ...... தம்பிரானே. 
பாடல் 667 
தானான தந்த தந்த தானான தந்த தந்த 
தானான தந்த தந்த ...... தனதான 


சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர் 
சீர்வாழ்வு சிந்தை பொன்ற ...... முதல்நாடித் 

தேன்மேவு செஞ்சொ லின்சொல் தானோதி வந்த ணைந்து 
தீராத துன்ப இன்ப ...... முறுமாதர் 

கோலாக லங்கள் கண்டு மாலாகி நின்ற னன்பு 
கூராமல் மங்கி யங்க ...... மழியாதே 

கோள்கோடி பொன்ற வென்று நாடோ று நின்றி யங்கு 
கூர்வாய்மை கொண்டி றைஞ்ச ...... அருள்தாராய் 

மாலாலு ழன்ற ணங்கை யார்மாம தன்க ரும்பின் 
வாகோட ழிந்தொ டுங்க ...... முதல்நாடி 

வாழ்வான கந்த முந்த மாறாகி வந்த டர்ந்த 
மாசூரர் குன்ற வென்றி ...... மயிலேறீ 

மேலாகு மொன்ற மைந்த மேனாடர் நின்றி ரங்க 
வேலாலெ றிந்து குன்றை ...... மலைவோனே 

வேய்போல வுந்தி ரண்ட தோள்மாதர் வந்தி றைஞ்சு 
வேலூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.