வாய்மை

2595
அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை
அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே. 1
2596
எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை
எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே. 2
2597
தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே. 3
2598
தானே யுலகில் தலைவ னெனத்தகும்
தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்
ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே. 4
2599
அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவோர் தாமே. 5
2600
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னை
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே. 6
2601
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை
கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற லாமே. 7
2602
எய்திய காலத் திருபொழு துஞ்சிவன்
மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில்
ஐயனும் அவ்வழி யாகிநின் றானே. 8
2603
எய்துவ தெய்தா தொழிவ திதுவருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி
பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே. 9
2604
கைகலந் தானை கருத்தினுள் நந்தியை
மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப்
பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே 10
2605
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டாம்
கத்தாள் திறக்கில் அரும் பேற தாமே. 11
2606
உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின்
மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப்
பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே. 12
2607
வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டா
தம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே. 13
2608
மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால்
தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான்
உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே. 14
2609
மனமது தானே நினையவல் லாருக்குக்
கினமெனக் கூறு மிருங்காய மேவற்
றனிவினி னாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே. 15