வரைக்காட்சிப் படலம் - 951

bookmark

951.

பின்னங்கள் உகிரின் செய்து.
   பிண்டி அம் தளிர்க் கைக் கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பி.
   தே மலர் கொய்கின்றாரும்;
வன்னங்கள் பலவும் தோன்ற
   மணிஒளிர் மலையின் நில்லார்
அன்னங்கள் புகுந்த என்ன.
   அகன் சுனை குடைகின்றாரும்.
 
பிண்டி   அம்  தளிர் - அசோகின் அழகிய தளிர்களை; உகிரில்
பின்னங்கள்  செய்து  -  (தம்)  நகங்களால்  சிறு சிறு துண்டுகளாகக்
கிள்ளி;   கைக் கொண்ட   சின்னங்கள்  -  கைக்  கொண்ட  அத்
துண்டுகளை;  முலையின்  அப்பி  -  தம்  தனங்களிலே அழகுபடப்
பொருத்தி;தேன்மலர்  -  தேனுடைய மலர்களை; கொய்கின்றாரும் -
பறிப்பவரும்;  வன்னங்கள்   பலவும் - பலவகையான வண்ணங்களும்;
தோன்ற  -  தோன்றும்படி;  மணி  ஒளிர்  மலையின் - நவமணிகள்
விளங்கும்  மலையிலே;  நில்லா  அன்னங்கள்  -  நிலையாக இருந்த
வாழாத  அன்னங்கள்;   புகுந்த என்ன - (இப்போது) புகுந்தன என்று
(கண்டோர்)  கருதும்படி;   அகல்சுனை  -  பரவியுள்ள  சுனைகளிலே;
குடைகின்றாரும்  -  (அச்   சேனையில்  உள்ள  மாதர்கள்)  மூழ்கிக்
குளிப்பவராயினர். 

தளிர்     முறிகளைத்  தம்  தனங்களில் அப்பி அலங்காரம் செய்து
கொள்வது  மகளிர்  இயல்பாம்.  மாதர்கள்  மலர் கொய்தலையும். சுனை
குடைதலையும்   செய்தனர்   என்பது.   அன்னப்  பறவை  மருதநிலக்
கருப்பொருளாதலால் ‘மலையின் நில்லா’ என்றார்.                 24