வரைக்காட்சிப் படலம் - 944
944.
பெருங் களிறு ஏயும் மைந்தர்
பேர் எழில் ஆகத்தோடு
பொரும் துணைக் கொங்கை அன்ன.
பொரு இல். கோங்கு அரும்பின் மாடே.
மருங்கு எனக் குழையும் கொம்பின்
மடப் பெடை வண்டும். தங்கள்
கருங் குழல் களிக்கும் வண்டும்.
கடிமணம் புணரக் கண்டார்.
பெருங்களிறு ஏயும் - பெரிய ஆண் யானையை ஒத்த; மைந்தர்
பேரெழில் ஆகத்தோடு - இளைஞர்களின் மிக்க அழகுடைய
மார்பிலே;பொரும் துணைக் கொங்கை - தாக்கும் இரட்டையான தனங்
களை; அன்ன பொரு இல் - ஒத்த வேறு உவமை இல்லாத;
கோங்கு அரும்பின் மாடு - கோங்கு அரும்புகளினிடத்து; மருங்கு
எனக் குழையும் - (அம் மகளிரின்) இடையைப் போலத் துவளுகின்ற;
கொம்பின் - பூங்கொம்பில் தங்கும்; மடப்பெடை வண்டும் - இளம்
பெண் வண்டுகளும்; தங்கள் கருங்குழலில் - தம் கரிய கூந்தலில்
படிந்து; களிக்கும் வண்டும் - களிக்கின்ற ஆண் வண்டுகளும்;
கடிமணம் புணர - புதுமணம் செய்து கொள்வதை; கண்டார் -
(மக்கள்) கண்டார்கள்.
தம் தனம் போன்ற கோங்கு அரும்பிலே பூங்கொம்பில் வாழும்
பெண் வண்டுகளும். கருங்கூந்தலில் படிந்த ஆண் வண்டுகளும்
புதுமணம் புரிவதை அங்கே தங்கிய மகிளர் கண்டார் என்பது. 17
