லெனின் - 1
1920 ஏப்ரல் மாதம் 22ல் மாஸ்கோ நகரத்தில் ஒரு தலைவர், தனக்கு பிறந்த நாள் கொண்டாடுவது கூடாது என்று உத்தரவிட்டார். அதையும் மீறி ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட்டம் நடத்தினர். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி அக்கூட்டத்தில் “சில மனிதர்களைப் பற்றி பேசுவது எளிதன்று. அவர்களுடைய சிறப்புகளையும் குறிப்பிடுவது இயலாது. நான் சொல்லோவியம் தீட்டுவதில் வல்லவன் என்றாலும் அவருடைய உருவத்தை உங்கள் முன் சித்தரிக்க சரியான சொற்கள் கிடைக்காமல் தவிக்கிறேன்” என்றார்.
அந்த ஒப்பற்ற தலைவர் தான் லெனின். விளாடிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் லெனினுக்கு இருந்தனர். இல்யா உல்யனாவ் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இவருடைய தந்தையின் இறப்பிற்குப் பிறகு, அண்ணன் அலெக்ஸாண்டர், ஜார் மன்னனை கொல்ல முயன்றதுக்காக 1887 ஆம் ஆண்டு மார்ச் 1ம் நாள் கைது செய்யப்பட்டரார். அதனையடுத்து 1887 ஆம் ஆண்டு மே 8ம் நாள் ஜார் மன்னரின் காவல்துறையால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தார்.
1887 ஆம் ஆண்டு கசான் பல்கலைக் கழகத்தில் லெனின் சேர்ந்தார், அப்பொழுது அன்னையுடன் சில்பர்க் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கினார். அங்கு தனது சகோதரர் அலெக்ஸாண்டரைப் போல தீவிரமான கருத்துகளை உடைய லாசர் போகோராக் (Lazar Bogoraz) உடன் சந்திப்பு நேர்ந்தது. லாசர் மக்கள் சுதந்திர கட்சி என்ற உழைப்பாளர்களின் நலன் சார்ந்த இடதுசாரி அமைப்பினை ஏற்படுத்தியிருந்தவர்.
லெனின் பல்கலைகழகத்தில் சட்டப்படப்பினை படித்தார். இவர் காலத்தில் ரஷ்யாவை ஜார் மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் கொடுங்கோல் ஆட்சியாளர்களாக இருந்தனர். மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் , ஆடம்பர வாழ்க்கையில் கவனம் செலுத்தினர். இதனால் வயிற்றுப் பசிக்கு ஆளாகி, பட்டினியால் செத்த தொழிலார்களின் எண்ணிக்கைகள் கணக்கில் அடங்கா.
அப்பொழுது மாணவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார், இதனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக் கழகம் அவருக்கு படிப்பு தர மறுத்தது. இதனையடுத்து லெனின் தானே சட்டப்படிப்பினை ஒன்றரை வருடத்தில் படித்து தேர்ந்ததாக கூறப்படுகிறது.
தொழிலாளர் விடுதலை இயக்கம் என்பதை தொடங்கி ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே காரல் மார்க்ஸின் கொள்கைகளை பரப்பரை செய்தார். 1895-ல் கைது செய்யப்பட்டு சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் விடுதலையாகி வந்தது 1900ல். ஸ்பார்க் என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார்.
விளாடிமிர் லெனின் தன் இளமைக் காலத்தில் நடாயா கிரூப்ஸ்காயா என்ற பள்ளி ஆசிரியயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரையும் ஜார் அரசு சைபீரியாவிற்கு நாடுகடத்தியது.
