மிதிலைக் காட்சிப் படலம் - 613
613.
சொரிந்தன நறு மலர் சுறுக் கொண்டு ஏறின;
பொரிந்தன கலவைகள். பொரியின் சிந்தின;
எரிந்த வெங் கனல் சுட. இழையில் கோத்த நூல்
பரிந்தன; கரிந்தன. பல்லவங்களே.
(அப்பொழுது) சொரிந்தன - படுக்கையில் பரப்பிய; நறுமலர் -
மணமுள்ள மலர்கள்; சுறுக்குண்டு ஏறின - (அவளுக்கு மென்மை
செய்யாமல்) கூர்மையாகித் (உடம்பில்) தைத்தன; பொரிந்தன
கலவைகள் - (அவளது உடம்பின் காமத் தீயால்) பொரிந்து போன
கலவைச் சந்தனங்கள்; பொரியின் - சிந்தின தீப்பொறிகள் போல
உதிர்ந்தன; எரிந்த வெங் கனல் சுட - (அவளது உடம்பில்
பற்றி) எரிகிற காமத்தீயானது சுடுவதால்; இழையில் கோத்த
- அணிகலன்களில் கோக்கப்பட்டுள்ள; நூல் பரிந்தன - நூல்கள்
அறுபட்டு நீங்கின; பல்லவங்கள் - (படுக்கையில் பரப்பட்ட)
தளிர்கள் கரிந்தன - கரிந்து போயின.
சுறுக் கொள்ளுதல் தீய்ந்து சுருளுதல்;கூர்மையை அடைதல் 50
