மிதிலைக் காட்சிப் படலம் - 612

bookmark

612.

கம்பம் இல் கொடு மனக் காம வேடன் கை
அம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள்.
வெம்புறு மனத்து அனல் வெதுப்ப. மென் மலர்க்
கொம்பு என. அமளியில் குழைந்து சாய்ந்தனள்.
 
கம்பம் இல் -  கலக்கம்  இல்லாத;   கொடு  மனம்  -  வலிய
மனத்தையுடைய; கானவேடன்  - காட்டில்  வாழும் வேடனது;  கை
அம்பொடு    -  கையால்  எய்யப்பட்ட  அம்பினால்;   சோர்வது
ஓர் மயிலும் - தளர்ந்து விழுவதோர்  மயில் பறவையை; அன்னவள்
- ஒத்தவளான    சீதை;    வெம்புறு     மனத்து - கொதிக்கின்ற
தன் மனத்தில் உண்டான; அனல் வெதுப்ப - காமத்தீ   எரிப்பதால்;
மென்மலர்க்  கொம்பு   என   -     (அனல்பட்ட     அளவில்
எரிக்கப்பட்ட)   பூங்கொம்பு    போல;       அமளியில் -  அம்
மலர்ப்படுக்கையில்; குழைந்து - வாடி; சாய்ந்தனள் - சாய்ந்தாள்.  

வேடனது     அம்பால் எய்யப்பட்ட மயிலானது தளர்ந்து வீழ்வது
போலச்  சீதை மன்மதனது மலர்க் கணையால் அடிப்பட்டுச்  சோர்ந்து
வீழ்ந்தாள்.  கம்பம்:  சலனம்.  நிலை  மாறுதல்.  அம்பொடு:  ஒடு -
கருவிப் பொருளில் வந்துள்ளது.                             49