மிதிலைக் காட்சிப் படலம் - 599

bookmark

இருவரும் மிக்க காதல் கொள்ளல் (599-602)

599.

நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.
 
நோக்கிய-  (அவ்வாறு  சீதை)  பார்த்த;  நோக்கு  எனும்  -
பார்வையாகிய; நுதிகொள் வேல் இணை - கூரிய இரண்டு வேல்கள்;
ஆக்கிய மதுகையான்  - ஆக்கம் பெற்ற வன்மையுடைய இராமனின்;
தோளின்  ஆழ்ந்தன  -   தோள்களிலே   அழுந்தின;   வீக்கிய
கணைகழல் -  ஒலிக்கும்  வீரக்கழல்  கட்டிய;  வீரன்  செங்கணும்
-  வீரனான இராமனுடைய  சிவந்த   கண்களும்; தாக்கு  அணங்கு
-  பிறரை   வேட்கையால்   தாக்குகின்ற   மோகினியாகிய   பெண்
தெய்வத்தை; அனையவள்   -   போன்ற   சீதையின்;   தனத்தில்
தைத்த   - கொங்கைகளில் தாக்கின.   

இராமன்.    சீதை ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால்
பருகினர்.    ஓர்   ஆவிற்கு   இரு   கோடுபோல   ஒத்த   காதல்
கொண்டவராயினர்.   ‘கண்ணொடு    கண்ணிணை   நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள். என்ன பயனும் இல’ - குறள்:1100  

தாக்கணங்கு: பார்க்கின்ற  ஆடவர்க்கு வேட்கையை  விளைவித்து
அதனால் அவர்களைத் தாங்கும் தேவதை.                    36