மிதிலைக் காட்சிப் படலம் - 597

bookmark

597.

இழைகளும் குழைகளும் இன்ன. முன்னமே.
மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும்
பழகிய எனினும். இப் பாவை தோன்றலால்.
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே!
 
குழைகளும்     -  காதணி  முதலான  சிறிய  அணிகலன்களும்;
இழைகளும்   -    (கழுத்தில்    அணியும்)    ஆரம்    போன்ற
பேரணிகலன்களும்;  இன்ன  -  இத்தன்மையனவாம்;  முன்னமே -
(இச்சீதை) மண்ணில் பிறப்பதற்கு முன்பே; மழைபொரு கண் இணை
- மழையொத்துக்  குளிர்ந்த  கண்களையுடைய்;  மடந்தைமாரொடும்
- அழகிய  பெண்களுடனே; பழகிய   எனினும்  -  பழகியவையாக
இருந்தாலும்; இப்பாவை தோன்றலால் - இந்தச் சீதை பிறந்ததனால்;
அழகு எனும்  அணியும்  -  பிறர்க்கு  அழகு  தரக்கூடிய   அந்த
அணிகலன்களும்; ஓர் அழகு  பெற்றவே - புதியதோர்  அழகினைப்
பெற்றன.

அணி:     பிறரால்    அணியப்பட்டு    அழகு     செய்வதால்
அணிகலன்களுக்கு  ‘அணி’  என்று பெயர். அத்தகைய அணிகள் பிற
பெண்களின்  உடம்பில் அணியப் பெற்று அவர்களுக்கு அழகு தரும்;
அவர்களால்  தாம்  அழகைப்  பெறுவதில்லை.  ஆனால்.  சீதையின்
உடம்பில்  இவை  அணியப்  பெற்றமையால் தாம் அழகைப் பெற்றன
என்பது  கருத்து. எனவே. அணிகளுக்கும் அழகு கொடுக்கக் கூடியது
சீதையின்  பேரழகு. ‘ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள்’
என்று  திருமாலைச்  சிறப்பித்துக்  கூறுவதுண்டு. சிற்றணிகலம்: குழை
முதலியன. பேரணிகலம்: ஆரம். மேகலை போல்வன.           34