மிதிலைக் காட்சிப் படலம் - 596

bookmark

596.

வெங் களி விழிக்கு ஒரு
   விழவும் ஆய். அவர்
கண்களின் காணவே
   களிப்பு நல்கலால்.
மங்கையர்க்கு இனியது ஓர்
   மருந்தும் ஆயவள்.
எங்கள் நாயகற்கு. இனி.
   யாவது ஆம்கொலோ?
 
வெங்களி   விழிக்கு- (பார்க்கும் ஆடவர்களின்)  விரும்பத்தக்க
களிப்பையுடைய  கண்களுக்கு; ஒரு விழியும் ஆயவர் - சிறந்த ஒரு
திருவிழாக் காட்சி  போன்று  உற்சாகம் தருகின்ற மகளிர்; கண்களில்
காணவே - (தத்தம்) கண்களால் (தன்னைக்) காணுந்தோறும்; களிப்பு
நல்கலால் -  (அப்  பெண்களுக்கும்) உள்ளக் களிப்பைத் தருவதால்;
மங்கையர்க்கு - அம் மங்கையர்க்கெல்லாம்; இனியது ஓர் மருந்தும்
-  இனிய  சுவையைத்  தரக்  கூடிய  அமுதம்  போன்ற;  ஆயவள்
- சீதையானவள்; இனி எங்கள்   நாயகற்கு  -  இனிமேல்  எங்கள்
தலைவனான  இராமனுக்கு; யாவது ஆம்  கொலோ  -  எத்தகைய
பொருளாவாளோ?

ஆடவர்களின்  கண்களுக்குக் களிப்பு தருகின்ற பெண்களும் கூடச்
சீதையின்   அழகைக்கண்டு  களிப்படைகின்றார்கள்.   அப்படியிருக்க
ஆண்களில்     அழகனாகிய     இராமனுக்கு    இவளது    அழகு
எத்தன்மையதாக இருக்குமோ? கனியான சீதை இங்கு அமுதமாகிறாள்;
ஏனெனில் சீதை அமுதினும் இனியவள் ஆதலின்.               33