மார்டின் லூதர் கிங்
அமெரிக்காவில் வெள்ளையர்களின் நிறவெறி சக கருப்பு மனிதர்களை அடிமைப்படுத்தி, தீண்டாமை எனும் பாவச்செயலை கருப்பர்கள் மேல் திணித்தது. வெள்ளையர்கள் அமெரிக்காவைப் பிடித்த பின்பு அங்கே வேலை பார்க்க எண்ணற்ற ஆப்ரிக்க மக்களை கொண்டு வந்தனர். அம்மக்களை கருப்பர்கள் எனக் கூறி ஆடு , மாடுகளை விடக் கேவலமாக நடத்தினர். மிருகங்களை விற்பதைப் போல அவர்களை தெருவில் வைத்து விற்றனர். அவர்களை வெள்ளையர்கள் கொன்றாலும், ஏன் என்று கேட்க யாரும் இல்லாத அனாதைகளாக விளங்கினர். இவர்களை அடிமைத் தனத்தில் இருந்து லிங்கன் விடுதலை கொடுத்தவுடன் நாடே பற்றி எறிந்த வரலாறு உண்டு.
பிறகு ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பின் நிலைமை ஓரளவு சீரானது. என்றாலும் கறுப்பர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்ந்தது. வெள்ளையர்களின் உணவகங்கள், கல்லூரிகள், பள்ளிச்சாலைகளில் நுழைந்து கருப்பர்கள் அடியும் உதையும் அளவில்லாமல் வாங்கினர். அநியாயம் அளவு கடந்து நடைபெறும் இடங்களில் எல்லாம் அவதாரங்கள் தோன்றுமே, அப்படித் தான் தோன்றினார் மார்ட்டின் லூத்தர் கிங்.
இன்னொரு காந்தியைப் போல தன் இன மக்களை அன்பு என்னும் ஆயுதத்தை ஏந்தச் சொன்னார் மார்டின் லூதர். பிற்காலத்தில் பாதிரியாராக மாறினார். ‘தலைமை ஏற்பது சேவகனாக இருக்கவே’ எனும் இயேசுவின் வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி. அதனை தனது வாழ்விலும் கடை பிடித்துக் காட்டினார்.
டிசம்பர் 1, 1955 ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பினப் பெண்மணி பேருந்தில் தான் அமர்ந்திருந்த இருக்கையை ஜிம் க்ரோ சட்டங்களின்படி வெள்ளைக்காரருக்கு விட்டு கொடுக்காது மறுத்ததின் விளைவாய், அப்பெண் அவமதிக்கப் பட்டாள் . இதனால் ஒரு பெரும் புரட்சியே வெடித்தது. அப்போது வெறும் 26 வயதான இளைஞனான மார்ட்டின் லூத்தர் கிங் ஒரு வருடம் முழுக்க அத்தனை கறுப்பின மக்களையும் அலபாமா மாகாணத்தில் பேருந்தில் போகாமல் நடந்து அல்லது டேக்ஸியில் போக வைத்து கறுப்பர் இன மக்கள் என அழைக்கப்பட்டவர்களின் உரிமையை மீட்டுத் தந்தார்.
இது போன்று காரணத்தால் அவரது வீட்டில் குண்டு வீசப்பட்ட போதும் கூட யார் மீதும் கோபப்படாமல் அன்பையே போதித்தார். சிலர் அவரிடம் சென்று உங்களால் மட்டும் எப்படி இப்படி இருக்க முடிகிறது என்று கேட்ட போது , மார்டின் லூதர் சிரித்திக் கொண்டே பதில் அளித்தாராம் . " என் தலையில் இரண்டு காளைகள் மோதுகின்றன. ஒன்று அன்பு; இன்னொன்று அராஜகம் - இதில் எது ஜெயிக்கிறது தெரியுமா? எதற்கு நான் அதிக உணவிடுகிறேனோ அதுவே ஜெயிக்கிறது! அதன் படி அன்பு எனும் காளைக்குத் தான் அதிக உணவு இடுகிறேன். அன்பே, போதும் எனக்கு. !" என்றாராம்.
வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது, அதை எதிர்த்து அகிம்சை வழியில் போராடினார். இதற்காக லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு 35 வயதில் வழங்கப்பட்டது. வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த மார்ட்டின் லூதர் கிங், 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி, டென்னிசி மாகாணம் மெம்பிஸ் என்ற பகுதியில் உள்ள லோரைன் ஓட்டல் பால்கனியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற வெள்ளைக்கார நிறவெறியர் ஜேம்ஸ் ஏர்ல் ராய் என்பவருக்கு 99 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர் கடந்த 1998ம் ஆண்டு தனது 70வது வயதில் மரணம் அடைந்தார்.
