மங்கள் பாண்டே
நாம் அனைவரும் பிரஞ்சுப் புரட்சி ,ரஷியப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி,ஏன் சீனப் புரட்சி ஆகிய அனைத்தையும் வரலாற்றில் படித்து இருக்கலாம் . ஆனால் , இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு நடந்த இந்தியப் புரட்சி எத்தனை பேருக்குத் தெரியும்?.
வாசகர்கள், இப்படியும் நினைக்கலாம் " என்ன இந்தியாவில் புரட்சியா? நம் நாட்டு மக்கள் பொறுமை சாலிகள் ஆயிற்றே என்று. " உண்மை தான் ஆனாலும், சாது மிரண்டால் காடு கொள்ளாது " என்ற பழமொழி உண்டு அல்லவா?. 1857 இல் அப்படித் தான் நடந்தே விட்டது. சாதுக்களாக அமைதி காத்த நமது இந்திய உடன் பிறப்புகள், வெள்ளையர்களின் அக்கிரமத்தை தாங்க முடியாமல் கொதித்து எழுந்த ஆண்டு. அப்படிப்பட்ட அந்த இந்தியப் புரட்சியின் மறு பெயர் தான் சிப்பாய் கழகம். அதனை ஆரம்பித்த பெருமை ஜான்சி ராணி முதல் மங்கள் பாண்டே வரை அனைவரையும் சேரும். வெள்ளையர்கள், " இனி இந்தியாவில் நமது காலட்சேமம் எத்தனை நாட்களோ?" என்று பயப்படும் படி செய்த மகத்தான புரட்சி அது.
அப் புரட்சிக்கான காரணங்கள் :-
(1) 87 வருடகாலத்துக்குள் பசி என்றால் என்ன என்று தெரியாத இந்தியத் திருநாட்டில் 12 பெரிய பஞ்சங்கள் ஏற்பட்டு. பலா ஆயிரம் மக்கள் பட்டினியால் செத்தனர். அதற்கு காரணம் ஆங்கிலேயர்கள் கொண்ட வந்த நிலச் சட்டங்கள், அநியாய வரிகள், ஜமிந்தார் முறைகள் போன்றவை .
(2) நன்றாக படித்து இந்தியர்கள் பெரிய உயர்பதவிக்கே போனாலும், அவர்களால் அடிப்படை ஆங்கிலேய ஊழியன் வாங்கும் சம்பளத்தைக் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
(3) மத நம்பிக்கை மீது பெரும் அடிகள் விழுந்தன. ராணுவத்தின் பாதுகாப்போடு கிறிஸ்துவ மதம் பரப்பப் பட்டது. இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறும் பிள்ளைகளுக்கு தந்தையின் சொத்துக்களில் உரிமை உண்டு என்று கொண்டு வரப்பட்ட சட்டம், பெரும்பான்மையான இந்துக்களை கொதிப்படைய செய்தது.
(4) ஆங்கிலேயரின் துணை படை திட்டம் மன்னர்களிடையே வெறுப்புணர்ச்சி உண்டாக்கியது. இரண்டாவது முகலாய அரசர் பகதூர் ஷாவை டெல்லியை விட்டு விரட்டி. அவரது அரச பட்டத்தையும் பறித்துக் கொண்டது ஆங்கிலேயே அரசு.
(5) இது தவிர, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அமைந்தன. அவ்வகை துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்டதோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில் தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.
யார் இந்த மங்கல் பாண்டே ?
மங்கள் பாண்டே ( சூலை 19, 1827 – ஏப்ரல் 8, 1857) என்பவர் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளத்தின் 34வது ரெஜிமெண்ட்டில் ஒரு படை வீரராக இருந்தவர். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். இவரைப் பற்றியும், உண்மையில் நடந்த நிகழ்வுகளையும் காண்போம்
பாண்டே உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார். நாக்வா கிராம மக்கள் தங்கள் முன்னோராக மங்கல் பாண்டேயையே குறிப்பிடுவர். மிகவும் தீவிரமான இந்துவான பாண்டே 1849 இல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் இணைந்தார். அக்கம்பனியின் 34வது பிரிவில் பணிபுரிந்தார்.
கல்கத்தாவின் பராக்பூர் நகரில் மார்ச் 29, 1857 மாலையில் தனது பிரிவில் உள்ள பல சிப்பாய்கள் கிளர்ந்தெழுத்த நிலையில் உள்ளார்கள் என லெப்டினண்ட் போ (Baugh) என்பவன் அறிவித்தான். அத்துடன் அவர்களில் மங்கள் பாண்டே என்பவன் துப்பாக்கியுடன் மற்றைய சிப்பாய்களை கிளர்ச்சிக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்ததாகவும் முதலில் காணும் வெள்ளைக்காரரை சுட்டு விடுவதாகவும் பயமுறுத்திக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தான்.
போ முதலில் தனது குதிரையில் ஏறி வாளையும் உருவிக்கொண்டு சிப்பாய்களை நோக்கிச் சென்றான். குதிரைச் சத்தத்தைக் கேட்ட பாண்டே அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுட்டான். எனினும் அது குறி தவறி குதிரையைத் தாக்கியது. போ பாண்டேயை நோக்கிச் சுட ஆரம்பித்தான். பாண்டே தனது வாளை உருவி போவைத் தாக்கிக் காயப்படுத்தினான். அதன் பின்னரே ஷேக் பால்ட்டு என்ற வேறொரு சிப்பாய் பாண்டேயை மேலும் தாக்காதாவாறு தடுத்து நிறுத்தினான். பாண்டே பின்னர் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் விசாரணையின் பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 8, 1857 இல் அவன் தூக்கிலிடப்பட்டான். 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக மே 6 ஆம் நாள் கலைக்கப்பட்டது.
பாண்டேயின் தாக்குதல் இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. மங்கள் பாண்டே "தியாகி" எனப் பின்னாளில் கருதப்பட்டார்.
