பெர்ட்ரண்டு ரசல் - 1

பெர்ட்ரண்டு ரசல் - 1

bookmark

பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்தஇவர் பெரும்பாலும் இங்கிலாந்தில் தன் வாழ்க்கையைக் கழித்தார். பெர்ட்ராண்ட் ரசல் மே 18, 1872 அன்று ஐக்கிய இராச்சியம், மான்மத்சயரில், டிரெல்லெக் என்ற ஊரில் பிறந்தார். அவர் தந்தைவழிப் பாட்டன், முதல் ஏர்ல் ரசல், பெட்போர்ட் ஆவார். அவர் விக்டோரியா மகாராணியால் அரசு அமைக்க அழைக்கப்பட்டு, அரசியின் பிரதம மந்திரியாக 1840, 1860களில் பணி புரிந்தார்.

ரசல் குடும்பம் பிரித்தானியாவில் பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் புகழ்பெற்று இருந்தது. டியூடர் வம்சம் அரசாளும் போது, அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர்னர். பிரித்தானியாவின் விக் (லிபரல் கட்சி) கட்சியின் பெரும் புள்ளிகளாகி, பிரித்தானியாவின் ஒவ்வொரு பெரும் அரசியல் மாற்றங்களில் போதும், சீரிய பங்கு வகித்தனர். சான்றாக 1536-ல் மடங்களின் ஒழிப்பு, 1688-89 காலத்தில் குளோரியசு புரட்சி (Glorious Revolution,1832) மாபெரும் சீர்திருத்தச் சட்டங்கள் இவற்றில் பங்கு வகித்தனர்.

ரசலின் தாய், காதரின் லூயிசா (1844-1874) பேரோன் எட்வார்ட் ஸ்டான்லியின் (Edward Stanley, 2nd Baron Stanley of Alderley,) மகளாவார். ரசலின் பெற்றோர்கள் அக்காலத்தில் மிக முற்போக்கான கொள்கையுடையவர்களாக இருந்தனர். இவரின் தந்தை வைகௌண்ட் ஆம்பர்லி ஓர் உயிரியலாளர்; இறைமறுப்புக் கொள்கை கொண்டவர்; தன் மனைவி தம் பிள்ளைகளின் ஆசிரியர், டக்ளஸ் ஸ்பால்டிங்கோடு காதல் கொண்டபோது அதனை இயல்பாய் மதித்தார். இருவரும்,அக்காலத்தில் நடத்தை பிறழ்வாக கருதப்பட்ட குடும்பகட்டுப்பாடு என்ற கொள்கைக்கு முதன் ஆதரவாளர்களாய் இருந்தனர்.

பிரித்தானியாவின், பயன்பாட்டுவாதத் தத்துவவாதியான ஜான் ஸ்டுவர்ட் மில் என்பவர் ரசலின் மானசீக ஆசானாவார். ரசல் பிறந்த அடுத்த வருடம் மில் இறந்து விட்டாரெனினும், மில்லின் எழுத்துகள் ரசலிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

ரசலுக்கு பிராங்க் என்ற சகோதரனும் ரெய்சல் என்ற சகோதரியும் இருந்தனர். ஜூன் 1874ல், ரசலின் அன்னை டிப்தீரியாவினால்க் மரணமடைந்தார். பின்னர் அடுத்தடுத்து சகோதரி ரெய்சலும்,நீண்ட கால மனச்சோர்வு காரணமாக ரசலின் தந்தையும் இறந்தனர். எனவே பிராங்கும், ரசலும் ஆழ்ந்த விக்டோரிய கலாசாரவாதிகளான பாட்டன் - பாட்டியின் வளர்ப்பில் விடப்பட்டனர். அவர்கள் லண்டனின் மேற்குப் பகுதியிலிருந்த ரிச்மண்ட் பார்க] எனுமிடத்திலுள்ள மாளிகையான பெம்பிரோக் லாட்ஜில் வசித்தனர். 1878ல் அவருடைய பாட்டனும் இறந்ததால் பாட்டி மட்டுமே ரசலின் குடும்பத்தின் தூணாக இருந்தார். பாட்டி மத விடயங்களில் கட்டுப்பாடானவராகவும் பழமையாளராகவும் இருந்தாலும், மற்ற விடயங்களில் முற்போக்கு எண்ணங்களைக் கொண்டிருந்தார். எடுத்துக்காட்டாக டார்வினின் படிவளர்ச்சிக் கொள்கையையும் அயர்லாந்து சுயாட்சியையும் ஆதரித்தார்.

ரசலின் சமூக நீதி மனப்பான்மையும், தன் கொள்கைகளை விட்டுத் தராத பண்பும் பாட்டியின் தாக்கங்கள்- பாட்டிக்கு பிடித்த பைபிள் மொழி “நீ கும்பல்களை பின்பற்றி தீங்கு செய்யாதே“ என்பது அவருடைய தாரக மந்திரம் ஆயிற்று. பெம்புரோக் லாட்ஜின் சூழ்நிலை, அடிக்கடி ஜெபங்களும், உணர்ச்சி அடக்குமுறையும், சடங்கு முறையில் மூழ்கியதுமாக இருந்தது; பிராங்க் இந்த நிலைக்கு வெளிப்படையான கிளர்ச்சியுடன் செயல்பட்டார்; சிறுவயதேயான பெர்ட்ராண்ட் தன் உணர்சிகளை ஒளிக்கக் கற்று கொண்டார்.

ரசலின் இளமைப் பருவம் மிகத் தனிமையாக இருந்தது, அதனால் பல தடவை தற்கொலை செய்து கொள்ள எண்ணினார். தன் சுய சரிதையில் தன் அதீத விருப்பங்கள் பால் உணர்சிகள், மதம், கணிதம் எனவும், கணிதத்தை பற்றி மேலும் மேலும் அறிய வேண்டுமென்ற ஆவல்தான் தற்கொலையில் இருந்து தன்னைத் தடுத்தது எனவும் கூறுகிறார். வீட்டிலேயே ரசலுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர் தமயன் பிராங்க், ரசலுக்கு யூக்ளிட்டின் கணிதத்தை அறிமுகம் செய்து வைத்தார்; அது அவர் வாழ்க்கையை உருமாற்றியது.

ரசலுக்கு கணக்கு படிப்பதற்கு கேம்ப்ரிட்ஜ்,டிரினிடி கல்லூரியில் உதவித் தொகையுடன் 1890இல் தனது கணிதக் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு ஜி.இ.மூர் மற்றும் ஆல்பிரட் நார்த் ஒயிட்ஹெட் முதலியவர்களின் நட்பைப் பெற்றார். விரைவிலே கணிதம், தத்துவம் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்றார். 1983இல் இளங்கலைப் பட்டமும், 1895ல் பெல்லொஷிப்பும் பெற்றார்.

ரசல் முதலில் அமெரிக்க குவேகர் ஆலிஸ் பியர்சல் ஸ்மித்தை 17ஆம் வயதில் சந்தித்தார். பியர்சல் ஸ்மித்தின் குடும்பத்திற்கு நண்பரானார் - அவர்களுக்கு ரசல் `லார்ட் ஜானின் பேரன்` என்றே தெரியும் , அதனால் ரசல் தங்களுடன் இருப்பதைப் பெருமையாகக் கருதினார்கள். அவர்களுடன் ரசல் பாரிஸ் பொருட்காட்சி, ஈபல் கோபுரம் எனப் பொழுதைக் கழித்தார். இது அக்காலத்தில் அரிதான ஒன்றாகும்.

ரசல் ஆலிஸ் என்ற பெண்மனியுடன் காதலில் விழுந்தார், தன் பாட்டிக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவளை டிசம்பர் 13, 1894 அன்று மணம் புரிந்தார். 1901 பிறகு அவர்கள் மனம் கசந்து போயிற்று, முடிவில், 1921ல், பல நாட்கள் பிரிவுக்கு பிறகு , மணரத்து செய்தனர். அக்காலங்களில் ரசல் பல பெண்களுடன் உறவில் இருந்தார். அவர்களில் லேடி ஆட்டோலின் மொரலும், நடிகை லேடி கான்ஸ்டன்ஸ் மேலசனும் குறிப்பிடத் தக்கவர்கள்.

1896ல் ரசல் "ஜெர்மன் சமுதாய மக்களாட்சி" என்ற தனது அரசியல் ஆய்வு நூலைப் பதிப்பித்தார். வாழ்க்கை முழுவதும் அரசியல் மற்றும் சமுதாய கோட்பாடுகளில் ஆர்வம் செலுத்தினார். 1896ல் , ஜெர்மன் சமுதாய மக்களாட்சி பற்றி ”லண்டன் ஸ்கூல் ஆஃப் எகொனாமிக்ஸ்”என்ற கல்லூரியில் பாடம் கற்பித்தார், அங்கேயே அதிகாரம் பற்றிய அறிவியல் பற்றி 1937ல் உரையாற்றினார். 1902ல் சிட்னி மற்றும் பியட்ரிஸ் வெப் ஆகியோர் தொடங்கிய "கோ-எபீசியண்ட் டைனிங் கிளப்" என்ற மன்றத்தில் அங்கத்தினரானார்.

1905ல், மைண்ட் என்ற தத்துவ இதழில் இவருடைய கட்டுரை `ஆன் டிநோடிங்` (On Denoting) வெளியானது. 1908ல் ராயல் கழகத்தின் உறுப்பினர் ஆனார். ஒயிட்ஹெட்டுடன் சேர்ந்து எழுதிய `கணித கோட்பாடுகள்(Principia Mathematica) என்ற நூலை எழுதினார். 1910ல் 'கணிதத்தின் அணுகுமுறை' என்ற மற்றொரு நூலை வெளியிட்டார். இவ்விரு நூல்களும், கணிதத்தில் ரசலுக்கு மிகப் புகழைத் தேடித் தந்தன. 1911ல் ஆஸ்திரியப் பொறியியல் மாணவர் லூட்விக் விட்கன்ஸ்டைனுடன் நட்பானது. அவனை பெரும் மேதை எனவும், தனது தருக்க அறிவியலின் வாரிசு எனவும் ரசல் கருதினார். பல நேரம் விட்கன்ஸ்டனின் பல மனபீதிகளையும், மனச்சோர்வையும் குறைக்க முயற்சி செய்தார். அவனுடன் பல நாட்கள் கழித்தாலும், அவனால் ஈர்க்கப்பட்டு, அவனது கல்வி, முன்னேற்றத்தை ஊக்குவித்தார். அந்த ஊக்குதலில் 1922ல், 'டிராக்டடஸ் லாஜிகோ-பிலசாபிகஸ்'(தருக்க தத்துவத்தின் ஏடு) என்ற நூலை விட்கன்ஸ்டைன் வெளியிட்டார்.து தெளிக்கப்பட்டது.