பூக் கொய் படலம் - 1013
அனைவரும் புனலாட்டுக்குச் செல்லுதல்
புனலாடப் புறப்படல்.
1013.
ஏயும் தன்மையர் இவ் வகையார் எலாம்.
தூய தண் நிழல் சோலை. துறு மலர்
வேயும் செய்கை வெறுத்தனர்; வெண் திரை
பாயும் தீம் புனல் - பண்ணை சென்று எய்தினார்.
ஏயும் தன்மையர் - (இதுகாறும் கூறியவாறு பூக்கொய்தலும் புலவி
கொள்ளுதலும் முதலிய) செய்கைகளை மேற்கொண்டவர்களான; இவ்
வகையார் எலாம் - இத்தகைய ஆடவரும் பெண்டிரும்; தூய தண்
நிழல் சோலை - தூய்மையுடைய குளிர்ந்த நிழலைத் தரும்
அச்சோலையிலே; துறுமலர் வேயும் செய்கை வெறுத்தனர் -
நெருங்கிய மலர்களைப் (பறித்துச்) சூடுகின்ற செயலின்மேல்
விருப்பமில்லாதவர் ஆயினர்; வெண்திரை பாயும் தீம்புனல் பண்ணை
- வெள்ளை அலைகள் பாயும் இனிய நீரில் விளையாடுவதில்; சென்று
எய்தினார் - (மனம்) சென்றதனால் (நீர்நிலைகளை) அடைந்தார்கள்.
துறுமலர் - வினைத்தொகை. புனல்பண்ணை: நீர்விளையாட்டு.
பழகப் பழகப் பாலும் புளிக்கும் ஆதலின் மலர்வேயும் செய்கையும்
வெறுத்தனர் என்றார். செயல்மாற்றம் சோர்வு மாற்றும் ஆதலின் பூக்
கொய்தோர் இனிப் புனல் விளையாடப் போகின்றனர் என அடுத்தப்
படலத்துக்குத் தோற்றுவாய் அமைத்தார். 39
