பூக் கொய் படலம் - 1010

bookmark

ஞானிகளும் காமத்தை வெல்வார் அல்லர்

1010.

நாறு பூங் குழல் நன்னுதல். புன்னைமேல்
ஏறினான் மனத்து உம்பர் சென்று. ஏறினாள்;-
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்.
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ!
 
நாறு     பூங்குழல்  நன்னுதல் -  மணக்கின்ற  பூக்களையணிந்த
கூந்தலையும்    அழகிய    நெற்றியையும்     உடையாள்    ஒருத்தி;
புன்னைமேல்  ஏறினான்  -  புன்னை  மரத்தின்  மீது  (பூக்கொய்ய)
ஏறியுள்ள  தன்  கணவனுடைய;  மனத்து உம்பர் சென்று ஏறினாள்-
மனத்தின்  மீது  ஏ?றி அமர்ந்திருந்தாள்; ஊறு ஞானத்து உயர்ந்தவர்
ஆயினும்  -  மனத்தில்  ஊற்றாய்ச்  சுரக்கின்ற   அறிவினைப் பெற்ற
உயர்ந்தோர் ஆனாலும்; வீறுசேர்  முலை  மாதரை  வெல்வரோ? -
பெருமைமிக்க     தனங்களையுடைய    பெண்டிரை   வெல்லவல்லவர்
ஆவரோ? (ஆகார் என்க.) 

அவன்     புன்னை மேல் ஏறினான்.  இவளோ அவன் உள்ளத்தின்
மேல்  ஏறினாள்.  உருவுடைய  மரத்தின்   மேல்  ஏறலினும்  உருவற்ற
உள்ளத்தின்மேல்  ஏறல்    அன்றோ   உயர்வுக்குரியது   என்றவாறு.
வேற்றுப்பொருள்வைப்பணி.   ஞானத்தால்   உயர்ந்தாரும்   காமத்தால்
தாழ்வர்  என்பது குறிப்பு. “வஞ்சி போல் மருங்குலார்  மாட்டு  யாவரே
வணங்கலாதார்?” (896) என்று முன்பும் கூறினார்.                 36