பிளாரன்ஸ் நைட்டிங்கேல் - 2
பிரித்தானியாவில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும் சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் (Notes on Hospitals), அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட தாதியர்பணி பற்றிய குறிப்புக்கள் (Notes on Nursing), "உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் " (Notes on Matters Affecting the Health), "பிரித்தானிய இரணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும் (Efficiency and Hospital Administration of the British Army) என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.
போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக பிபிசியினால் கருதப்பட்டார். அவர் சற்று நாட்களில் நோய்வாய்ப்பட நேர்ந்தது. போரில் அவரது பணியின் மூலம் ஏற்பட்ட தகைவே (மனவுளைச்சல்) அதற்கான மூலகாரணியென எண்ணப்படுகிறது.
விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று, படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் அவ்வாணைக்குழுவிற்குத் தேவையான அறிக்கைகள் ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை. சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிக்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார்.
துருக்கியிலிருந்த போது நவம்பர் 29 1855 அன்று இவரது பணியினைக் கௌரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன. இந்நிதியத்தின் பணத்தில் £45000களைக் கொண்டு புனித தோமையர் மருத்துவமனையில் ஜூலை 9 1860 அன்று நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக புளோரன்ஸ் நைட்டிங்கேல் தாதியிய மற்றும் செவிலியர் பயிற்சிக்கூடம் என அறியப்படுகிறது. இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக்கான ஒரு நல்ல அறிமுகமாகவும் இந்நூல் கருதப்படுகிறது.
தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார். 1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர். புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார். 1907 இல் ஓர்டர் ஒவ் மெரிட் எனும் விருதையும் இவர் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி இவராவார்.
குரோனிக் ஃபட்டீக் சின்ட்ரோம் (Chronic Fatigue Sydnrome)(அதீத களைப்பு ஏற்படல்) எனும் நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாக உள்ளது. 1896 ஆம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். 1910, ஆகஸ்ட் 13 ஆம் நாள் தனது 90 ஆம் வயதில் மிகவும் அமைதியாக தனது அறையில் மரணமெய்தினார். Park Lane. இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் அபியில் புதைக்க அரசு முன்வந்த போதும், அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது.
