பழமுதிர்சோலை

bookmark

பாடல் 1307
ராகம் - ஸிந்துபைரவி / பூர்விகல்யாணி, தாளம் - மிஸ்ரசாபு (3 1/2) 
தகதிமி-2, தகிட-1 1/2 

தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான 

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி 
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் 
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே 
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் 
மகபதி யாகி மருவும் வலாரிமகிழ்களி கூரும் ...... வடிவோனே 
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே 
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே 
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே. 
பாடல் 1308  
தனதன தான தான தனதன தான தான தனதன தான தான ...... தனதான 

இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார இளநகை யாட ஆடி ...... மிகவாதுற் 
றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால இணைமுலை மார்பி லேற ...... மதராஜன் 
கலவியி லோடி நீடு வெகுவித தாக போக கரணப்ர தாப லீலை ...... மடமாதர் 
கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது கருதிய ஞான போத ...... மடைவேனோ 
கொலைபுரிகாளி சூலி வயரவி நீலி மோடி குலிச குடாரியாயி ...... மகமாயி 
குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி குணவதி யால வூணி ...... யபிராமி 
பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி ...... புதல்வோனே 
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர் சோலை மேவு ...... பெருமாளே. 
பாடல் 1309  
ராகம் – ஹம்ஸத்வனி, தாளம் - அங்கதாளம் (8 1/2) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3 

தானதன தான தந்த ...... தனதான 

காரணம தாக வந்து ...... புவிமீதே 
காலனணு காதி சைந்து ...... கதிகாண 
நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத 
ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே 
ஆரமுத மான தந்தி ...... மணவாளா 
ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே 
சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா 
சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே. 
பாடல் 1310  
ராகம் – ஸிம்மேந்திரமத்யமம், தாளம் - அங்கதாளம் (5 1/2) 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 

தானதன தான தந்த தானதன தான தந்த 
தானதன தான தந்த ...... தனதான 

சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர் 
சேருபொரு ளாசை நெஞ்சு ...... தடுமாறித் 
தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று 
தேடினது போக என்று ...... தெருவூடே 
வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள் 
மாதர்மய லோடு சிந்தை ...... மெலியாமல் 
வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன் 
மாயவினை தீர அன்பு ...... புரிவாயே 
சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழ மிஞ்சி 
சேணிலவு தாவ செம்பொன் ...... மணிமேடை 
சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த 
தீரமிகு சூரை வென்ற ...... திறல்வீரா 
ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று 
ளாடல்புரியீசர் தந்தை ...... களிகூர 
ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த 
ஆதிமுத லாக வந்த ...... பெருமாளே. 
பாடல் 1311  
தானதன தான தந்த தானதன தான தந்த 
தானதன தான தந்த ...... தனதான 

வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள் 
வேல்விழியி னான்ம யங்கி ...... புவிமீதே 
வீசுகையி னாலி தங்கள் பேசுமவர் வாயி தஞ்சொல் 
வேலைசெய்து மால்மி குந்து ...... விரகாகிப் 
பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு 
பாதகனு மாகி நின்று ...... பதையாமல் 
பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை 
பாதமலர் நாடி யென்று ...... பணிவேனோ 
புரணம தான திங்கள் சூடுமர னாரிடங்கொள் 
பூவையரு ளால்வ ளர்ந்த ...... முருகோனே 
பூவுல கெலாம டங்க வோரடியி னால ளந்த 
பூவைவடி வானு கந்த ...... மருகோனே 
சூரர்கிளை யேத டிந்து பாரமுடி யேய ரிந்து 
தூள்கள்பட நீறு கண்ட ...... வடிவேலா 
சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து 
சோலைமலை மேல மர்ந்த ...... பெருமாளே. 
பாடல் 1312  
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த 
தானதன தந்த தந்த ...... தனதான 

வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து 
மால்வரை யசைந்த நங்கன் ...... முடிசாய 
வாளகிரியண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்த 
மாதவ மறந்து றந்து ...... நிலைபேரப் 
பூரண குடங்க டிந்து சிதகள பம்பு னைந்து 
பூசலை விரும்பு கொங்கை ...... மடவார்தம் 
போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து 
பூசனைசெய் தொண்ட னென்ப ...... தொருநாளே 
ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள் 
ஆகுதி யிடங்கள் பொங்கு ...... நிறைவீதி 
ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை 
யாரமர வந்த லம்பு ...... துறைசேரத் 
தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற 
சூழ்மணிபொன் மண்ட பங்கள் ...... ரவிபோலச் 
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற 
சோலைமலை வந்து கந்த ...... பெருமாளே. 
பாடல் 1313  
ராகம் – பீம்பளாஸ், தாளம் - அங்கதாளம் (9) 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1 

தான தானதன தத்ததன தத்ததன 
தான தானதன தத்ததன தத்ததன 
தான தானதன தத்ததன தத்ததன ...... தந்ததான 

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி 
வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி 
ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு ...... மிந்துவாகை 
ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி 
யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத 
ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் ...... விந்துநாத 
ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக 
மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு 
மோது வேதசர சத்தியடி யுற்றதிரு ...... நந்தியூடே 
ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற 
மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் 
யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை ...... யின்றுதாராய் 
வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ் 
வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள் 
மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண ...... செங்கையாளி 
வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை 
வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென் 
மாசு சேரழுபி றப்பையும றுத்தவுமை ...... தந்தவாழ்வே 
காசி ராமெசுரம் ரத்நகிரிசர்ப்பகிரி
எருர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல் 
காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் ...... செந்தில்நாகை 
காழி வேளுர்பழ நிக்கிரிகுறுக்கைதிரு 
நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் 
காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் ...... தம்பிரானே. 
பாடல் 1314  
ராகம் – தேநுக, தாளம் - திஸ்ரத்ரிபுடை 

தனனாதன தானன தத்தன 
தனனாதன தானன தத்தன 
தனனாதன தானன தத்தன ...... தனதான 

கருவாகியெ தாயுத ரத்தினி 
லுருவாகவெ கால்கையு றுப்பொடு 
கனிவாய்விழி நாசியு டற்செவி ...... நரைமாதர் 
கையிலேவிழ வேகிய ணைத்துயி 
லெனவேமிக மீதுது யிற்றிய 
கருதாய்முலை யாரமு தத்தினி ...... லினிதாகித் 
தருதாரமு மாகிய சுற்றமு 
நலவாழ்வுநி லாதபொ ருட்பதி 
சதமாமிது தானென வுற்றுனை ...... நினையாத 
சதுராயுன தாளிணை யைத்தொழ 
அறியாதநிர் மூடனை நிற்புகழ் 
தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ ...... தொருநாளே 
செருவாயெதி ராமசு ரத்திரள் 
தநல்முளைக ளோடுநி ணத்தசை 
திமிர்தாதுள பூதக ணத்தொடு ...... வருபேய்கள் 
திகுதாவுண வாயுதி ரத்தினை 
பலவாய்நரி யோடுகு டித்திட 
சிலகூகைகள் தாமுந டித்திட ...... அடுதீரா 
அருமாமறை யோர்கள்து தித்திடு 
புகர்வாரண மாதுத னைத்திகழ் 
அளிசேர்குழல் மேவுகு றத்தியை ...... அணைவோனே 
அழகானபொன் மேடையு யர்த்திடு 
முகில்தாவிய சோலைவி யப்புறு 
அலையாமலை மேவிய பத்தர்கள் ...... பெருமாளே. 
பாடல் 1315  
தானதத்த தான தனாதனா தன 
தானதத்த தான தனாதனா தன 
தானதத்த தான தனாதனா தன ...... தனதானா 

சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென 
நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென 
சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ...... வருமானார் 
சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு 
நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு 
தேடியொக்க வாடி யையோ வையோ வென ...... மடமாதர் 
மார்படைத்த கோடு பளீர் பளீ ரென 
ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென 
மாமசக்கி லாசை யுளோ முளோ மென ...... நினைவோடி 
வாடை பற்று வேளை யடா வடா வென 
நீமயக்க மேது சொலாய் சொலாயென 
வாரம்வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே 
பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ் 
கோடொ டித்த நாளில் வரைஇ வரைஇ பவர் 
பானி றக்க ணேசர் குவா குவா கனர் ....... இளையோனே 
பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை 
மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு 
பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரோசா 
போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென 
நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென 
போயறுத்த போது குபீர் குபீ ரென ...... வெகுசோரி
பூமியுக்க வீசு குகா குகா திகழ் 
சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள் 
பூணியிச்சை யாறு புயா புயா றுள ...... பெருமாளே. 
பாடல் 1316  
ராகம் – சங்கராபரணம், தாளம் - ஆதி - திஸ்ரநடை (12) 

தனன தான தான தத்த 
தனன தான தான தத்த 
தனன தான தான தத்த ...... தனதான 

துடிகொ ணோய்க ளோடு வற்றி 
தருண மேனி கோழை துற்ற 
இரும லீளை வாத பித்த ...... மணுகாமல் 
துறைக ளோடு வாழ்வு விட்டு 
உலக நூல்கள் வாதை யற்று 
சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே 
உடல்செய் கோர பாழ்வ யிற்றை 
நிதமு மூணி னாலு யர்த்தி 
யுயிரினீடு யோக சித்தி ...... பெறலாமே 
உருவி லாத பாழில் வெட்ட 
வெளியி லாடு நாத நிர்த்த 
உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ 
கடிது லாவு வாயு பெற்ற 
மகனும் வாலி சேயு மிக்க 
மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க்
களமு றானை தேர்நு றுக்கி 
தலைக ளாறு நாலு பெற்ற 
அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே 
முடுகு வீர சூர பத்மர் 
தலையின் மூளை நீறு பட்டு 
முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா 
முநிவர் தேவர் ஞான முற்ற 
புநித சோலை மாமலைக்குள் 
முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே. 
பாடல் 1317  
தானத் தானன தத்தன தத்தன 
தானத் தானன தத்தன தத்தன 
தானத் தானன தத்தன தத்தன ...... தனதான 

பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள் 
நேசித் தாரவர் சித்தம ருட்டிகள் 
பாரப் பூதர மொத்தத னத்திகள் ...... மிகவேதான் 
பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள் 
சீவிக் கோதிமு டித்தள கத்திகள் 
பார்வைக் கேமயலைத்தரு துட்டிக ...... ளொழியாத 
மாசுற் றேறிய பித்தளை யிற்பணி 
நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள் 
மார்பிற் காதினி லிட்ட பிலுக்கிகள் ...... அதிமோக 
வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள் 
நேசித் தாரையு மெத்திவ டிப்பவர் 
மாயைக் கேமனம் வைத்தத னுட்டின ...... மலைவேனோ 
தேசிக் கானக முற்றதி னைப்புன 
மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள் 
சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள் ...... மணவாளா 
தேடிப் பாடிய சொற்புல வர்க்கித 
மாகத் தூதுசெ லத்தரில் கற்பக 
தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி ...... வருவோனே 
ஆசித் தார்மன திற்புகு முத்தம 
கூடற் கேவைகை யிற்கரை கட்டிட 
ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி ...... படுவோனோ 
டாரத் தோடகி லுற்றத ருக்குல 
மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய 
ஆதிச் சோலை மலைப்பதி யிற்றிகழ் ...... பெருமாளே. 
பாடல் 1318  
ராகம் - சக்ரவாஹம் / குந்தலவராளி, தாளம் - ஆதி 
(எடுப்பு - 1/2 இடம்) 

தானதன தந்த தானதன தந்த 
தானதன தந்த ...... தனதான 

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் 
மாயமதொ ழிந்து ...... தெளியேனே 
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து 
மாபதம ணிந்து ...... பணியேனே 
ஆதியொடு மந்த மாகிய நலங்கள் 
ஆறுமுக மென்று ...... தெரியேனே 
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட 
தாடுமயி லென்ப ...... தறியேனே 
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு 
நானிலம லைந்து ...... திரிவேனே 
நாகமணி கின்ற நாதநிலை கண்டு 
நாடியதில் நின்று ...... தொழுகேனே 
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற 
சோகமது தந்து ...... எனையாள்வாய் 
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று 
சோலைமலை நின்ற ...... பெருமாளே. 
பாடல் 1319  
தானதன தத்த தானதன தத்த 
தானதன தத்த ...... தனதான 

வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி 
மாயநம னுக்கு ...... முறவாகி 
மாதவம ழித்து லீலைகள் மிகுத்து 
மாவடுவை யொத்த ...... விழிமாதர் 
சீருட னழைத்து வாய்கனிவு வைத்து 
தேனித ழளித்து ...... அநுபோக 
சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து 
சீர்மைகெட வைப்ப ...... ருறவாமோ 
வாரினை யறுத்து மேருவை மறித்து 
மாகனக மொத்த ...... குடமாகி 
வாரவணை வைத்து மாலளித முற்று 
மாலைகளு மொய்த்த ...... தனமாது 
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி 
தோகையுமை பெற்ற ...... புதல்வோனே 
சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து 
சோலைமலை யுற்ற ...... பெருமாளே. 
பாடல் 1320  
தனன தனதன தனத்தத் தாத்த 
தனன தனதன தனத்தத் தாத்த 
தனன தனதன தனத்தத் தாத்த ...... தனதான 

அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி 
விழிகள் கடையிணை புரட்டிக் காட்டி 
அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி ...... யநுராக 
அவச இதமொழி படித்துக் காட்டி 
அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி 
அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி ...... யணியாரம் 
ஒழுகு மிருதன மசைத்துக் காட்டி 
எழுத வரியிடை வளைத்துக் காட்டி 
உலவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி ...... யுறவாடி 
உருகு கடிதட மொளித்துக் காட்டி 
உபய பரிபுர பதத்தைக் காட்டி 
உயிரை விலைகொளு மவர்க்குத் தேட்ட ...... மொழிவேனோ 
முழுகு மருமறை முகத்துப் பாட்டி 
கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட 
முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு ...... முனிநாடா 
முடுகு முதலையை வரித்துக் கோட்டி 
அடியர் தொழமக வழைத்துக் கூட்டி 
முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...... முதுநீதர் 
பழைய கடதட முகத்துக் கோட்டு 
வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு 
பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு ...... பரமேசர் 
பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு 
குமர குலமலை யுயர்த்திக் காட்டு 
பரிவொ டணிமயில் நடத்திக் காட்டு ...... பெருமாளே. 
பாடல் 1321  
ராகம் - யமுனா கல்யாணி (மத்யம ஸ்ருதி), தாளம் - ஆதி 
(எடுப்பு - 1/2 இடம்) 

தனதன தத்தத் தனதன தத்தத் 
தனதன தத்தத் தனதன தத்தத் 
தனதன தத்தத் தனதன தத்தத் ...... தனதானா 

தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக் 
கலகலெ னப்பற் கட்டது விட்டுத் 
தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் ...... தடுமாறித் 
தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட் 
டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச் 
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் ...... பலகாலும் 
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத் 
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத் 
தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் ......டுயிர்போமுன் 
திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித் 
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச் 
செனனம றுக்கைக் குப்பர முத்திக் ...... கருள்தாராய் 
கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப் 
புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக் 
கடகுந டத்தித் திட்டென எட்டிப் ...... பொருசூரன் 
கனபடை கெட்டுத் தட்டற விட்டுத் 
திரைகட லுக்குட் புக்கிட எற்றிக் 
களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப் ...... பொருகோவே 
குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக் 
குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக் 
குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற் ...... றிரிவோனே 
கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச் 
சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக் 
குலகிரியிற்புக் குற்றுரை யுக்ரப் ...... பெருமாளே. 
பாடல் 1322  
தனதன தனந்த தான தனதன தனந்த தான 
தனதன தனந்த தான ...... தனதான 

மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ 
மணபரிமளங்கள் வேர்வை ...... யதனோடே 
வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க 
வனைகலை நெகிழ்ந்து போக ....... இளநீரின் 
முலையிணை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட 
முகமுகமொ டொன்ற பாய ...... லதுனூடே 
முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு 
முடிவடிவொ டங்கை வேலு ...... மறவேனே 
சிலைநுத லிளம்பெண் மோகி சடையழகி யெந்தை பாதி 
திகழ்மர கதம்பொன் மேனி ...... யுமைபாலா 
சிறுநகை புரிந்து சூரர் கிரிகட லெரிந்து போக 
திகழயி லெறிந்த ஞான ......முருகோனே 
கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள 
குணவலர் கடம்ப மாலை ...... யணிமார்பா 
கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான 
குலகிரிமகிழ்ந்து மேவு ...... பெருமாளே.