பகத்சிங்
பகத் சிங்
💪 பகத் சிங் அவர்கள் 1907ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூர் மாவட்டத்திலுள்ள "பங்கா" என்ற கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.
💪 இவர் பிறந்த தினம், இவரின் தந்தை மற்றும் இவரின் இரு உறவினர்கள் சிறையிலிருந்து வெளியான சிறந்த நாளாக இருந்தது. சிறையிலிருந்து வெளிவந்த கிசன் சிங் தன் மகனுக்கு பகத் சிங் என்று பெயரிட்டார். பகத் என்றால் அதிர்ஷ்டம் என்று பொருள்.
💪 உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காக போராடி மடிந்து போனதால், இவர் "சாஹீது (மாவீரன்) பகத் சிங்" என அழைக்கப்பட்டார்.
ஆரம்பகால வாழ்க்கை :
💪 பகத் சிங்கின் குடும்பம் விடுதலைப் போராட்ட வீரர்களை கொண்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார். இவரது குடும்பத்தில் பலர் ராணுவத்திற்காக பணியாற்றினர்.
💪 லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியை தொடங்கிய பகத் சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார்.
💪 இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களை படிக்க ஆரம்பித்து பொதுவுடைமை கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். மேலும், பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.
பகத் சிங்கின் சபதம் :
💪 1919ஆம் ஆண்டு, இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, "ரெஜினால்ட் டையர்" என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது.
💪 அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது. இந்த கொடூரமான படுகொலை, பகத் சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தை விதைத்ததோடு மட்டுமல்லாமல், இந்திய மக்களின் ரத்தம் தோய்ந்த அம்மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு, "இந்திய விடுதலையே எம் லட்சியம்" என அம்மண்ணின் மீது சத்தியம் செய்தார்.
💪 பகத் சிங், தன்னுடைய 13வது வயதில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். 1922ஆம் ஆண்டு கோரக்பூரில் நடந்த "சௌரி சௌரா" வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத் சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார்.
💪 அதன் விளைவாக "அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!" என முடிவுக்கு வந்தார். தனது 14வது வயதில் "வந்தே மாதரம்" என்று காகிதத்தில் எழுதிய பகத் சிங், அந்த காகிதங்களை கொண்டுபோய் சுவர்களில் ஒட்டினார்.
💪 1924ஆம் ஆண்டு, "இந்துஸ்தான் குடியரசுக் கழகம்" என்னும் அமைப்பில் பகத் சிங் இணைந்தார். சுகதேவ் தபார், சிவராம் ராஜகுரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோர் இவ்வமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.
வீட்டை விட்டு வெளியேறிய பகத் சிங் :
💪 தனது 19வது வயதில் இந்தியாவின் தேசிய இளைஞர் சங்கம் ஒன்றை நிறுவினார். பிறகு அடுத்த ஆண்டு தனக்கு திருமணம் நடக்கப்போவதை அறிந்த பகத் சிங் தனது பெற்றோர்களிடம் சொல்லாமல் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் நகருக்கு சென்றார்.
💪 அந்த கடிதத்தில் பகத் சிங் "இது திருமணத்துக்குரிய நேரமல்ல... நாடு என்னை அழைக்கிறது" என்று அவரின் தந்தை கிசன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். ஆனால், அவரின் தந்தையோ "உன் பாட்டிக்காக திருமணத்துக்கு நீ ஒப்புக்கொள்ள வேண்டும்" என்றார்.
💪 அதற்கு பகத் சிங், "நீங்கள் பாட்டிக்காக கவலைப்படுகிறீர்கள். நான் கோடிக்கணக்கான இந்திய மக்களின் தாயாக விளங்கும் நம் பாரத மாதாவிற்காக கவலைப்படுகிறேன். இந்தியாவின் நலனுக்காக நான் எல்லாவற்றையுமே தியாகம் செய்கிறேன்" என்றார்.
நவஜ்வான் பாரத சபா :
💪 பிறகு 1926ல் பகத் சிங், "நவ்ஜவான் பாரத் சபா" என்ற இளைஞர் அமைப்பை நிறுவினார். நவ்ஜவான் பாரத சபா என்றால் இந்திய இளைஞர்கள் சங்கம் என்று அர்த்தம். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் பார்வை இந்த சங்கத்தின் மீது விரும்பியது. நாடு முழுவதும் இருந்து இந்திய இளைஞர்கள் இவரது சங்கத்திற்கு தங்களது ஆதரவினை கொடுத்தனர்.
💪 சங்கத்திற்கு ஆதரவு தருவதோடு மட்டுமின்றி அவ்வப்போது ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட்டங்களையும் நிகழ்த்தினர். காந்தியின் அகிம்சை முறையினை விடுத்து சண்டையிட்டு ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்.
💪 மேலும், இவரது தாக்கம் அதிகமாகி கொண்டே இருப்பதை கவனித்த ஆங்கிலேய அரசு பகத் சிங்கை இப்படியே விடக்கூடாது என்று அவர் மீது பொய்யாக ஒரு குண்டு வெடிப்பு வழக்கினை ஜோடித்து அவரை சிறைக்கு அனுப்பினர். அதன்பின் ஐந்து வாரங்கள் கழித்து சிறையில் இருந்து பகத் சிங் வெளியே வந்தார்.
விடுதலைப் போரில் பகத் சிங்கின் பங்கு :
💪 "நமது இறுதி லட்சியம் சோசலிசம்" என்பதை வலியுறுத்திய பகத் சிங், 1928-ல் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கூடி "இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம்" (HRSA) என்று அந்த அமைப்பின் பெயரை மாற்றினார்.
💪 ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல, இந்திய முதலாளிகளிடமிருந்தும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் பகத் சிங்.
லாலா லஜபதி ராயை தாக்கிய சைமன் குழு :
💪 இந்தியாவின் அரசியல் அமைப்பு நிலைமையினை பற்றி தெரிந்துகொள்ள ஆங்கிலேய அரசு ஒரு குழுவினை இந்தியாவில் நியமித்தது. அந்த குழு தான் "சைமன் குழு". இந்த குழுவானது இந்தியாவின் அரசியல் நிலைமையினை பற்றி அறிக்கை <ஒன்றினை ஆங்கிலேய அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும். இதுவே அந்த குழுவினை உருவாக்கியதற்கான நோக்கமாகும்.
💪 இந்த சைமன் குழுவினை எதிர்த்து லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் அமைதியான ஒரு அணிவகுப்பினை நடத்தினார். அவர்களை கலைக்க ஆங்கிலேய காவல் மேல் அதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் உத்தரவிட்டார். அதன்படி அணிவகுப்பில் பங்கேற்றவர்களை காவலர்கள் தாக்கி அந்த அணிவகுப்பினை கலைத்தனர்.
💪 மேலும், லாலா லஜபதி ராயை காவல் மேல் அதிகாரியான ஜேம்ஸ் ஏ ஸ்காட் என்பவர் நேரடியாக தாக்கினார். இதனால் லாலா லஜபதி ராய் அவர்கள் படுகாயம் அடைந்தார்.
காவல் அதிகாரி சாண்டர்ஸை சுட்டு கொன்ற பகத் சிங் :
💪 ஜேம்ஸ் ஏ ஸ்காட் என்பவர் மூலம் படுகாயம் அடைந்த லாலா லஜபதி ராய் அடிப்பட்ட அடுத்த மாதம் காலமானார். இதனால் கோபமுற்ற பகத் சிங் தனது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஜேம்ஸ் ஏ ஸ்காட்டை கொல்ல முடிவு செய்தார்.
💪 அந்த திட்டத்தின் படி காவல் தலைமை அலுவலகத்தில் இருந்து ஜேம்ஸ் ஏ ஸ்காட் வெளியே வரும்போது சுட்டு கொல்லலாம் என்று முடிவு செய்தனர். ஆனால், பகத் சிங் ஜேம்ஸ் ஏ ஸ்காட்டை நேரில் கண்டதில்லை. திட்டமிட்டபடி காவல் தலைமை அலுவலகத்தின் அருகில் பகத் சிங் மற்றும் அவரது நண்பர்கள் மறைந்து இருந்தனர்.
💪 தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது ஜேம்ஸ் ஏ ஸ்காட் என்று நினைத்து அவருக்கு பதிலாக சாண்டர்ஸை பகத் சிங்கிடம் அடையாளம் காட்டினர். உடனே பகத் சிங் சாண்டர்ஸை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி மூலம் சுட்டுக்கொன்று அங்கிருந்து தப்பிச்சென்றார்.
பகத் சிங்கின் மறைவு :
💪 பகத் சிங் காவல் அதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவான அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாக போராடினர். அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு தொழில் தகராறு சட்ட வரைவு" என்ற ஒன்றை கொண்டுவந்தது.
💪 இச்சட்ட வரைவை ஏற்காத பகத் சிங் "சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்" குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929ஆம் ஆண்டு, ஏப்ரல் 8ஆம் தேதி, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் நாடாளுமன்றம் வழக்கம்போல இந்திய மக்களுக்கு எதிராக இயங்கிக்கொண்டிருக்க, அண்டமே அதிரும் வண்ணம் ஒரு பேரிரைச்சல். குண்டுவெடித்ததை உணர்ந்தவர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர்.
💪 எங்கும் புகை...
💪 புகை மண்டலத்தை புயலாக கிழித்துக்கொண்டு "இன்குலாப் ஜிந்தாபாத்" என முழங்கியபடியே வந்தார் பகத் சிங்.
💪 ஆங்கிலேயர்களை எதிர்த்து தனி ஒரு இளைஞன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருப்பதை கவனித்த ஆங்கிலேய அரசு பகத் சிங்கினை முடிவுக்கு கொண்டு வர தருணத்தினை எதிர்பார்த்து காத்திருந்தது.
💪 பிறகு அவரே ஆங்கிலேயர்களிடம் சரண் அடைந்தார். அவரை விட்டுவைத்தால் நம்மால் இங்கு இருக்க முடியாது என்று நினைத்த ஆங்கிலேயர்கள் உடனே அவரை கைது செய்தனர்.
💪 இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் உரையாற்றிய பகத் சிங், "உணவை உற்பத்தி செய்யும் விவசாயி பசியோடு இருக்கிறார்.
💪 துணி நெய்து கொடுப்பவரின் குழந்தைகளோ துணியில்லாமல் தவிக்கின்றனர்.
💪 ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக, தொழிலாளிகளின் உழைப்பை முதலாளிகள் உறிஞ்சுகின்றனர்.
💪 இந்த சூழ்நிலை வெகுகாலம் நீடிக்காது. "இந்த சமூகத்தை மாற்றும் எரிமலைகள் நாங்கள்" என்று முழங்கினார் பகத் சிங்.
💪 "முடிவெடுத்த காதுகளில் எந்த முழக்கமும் விழாது" என்பதற்கேற்ப ஆங்கிலேயே செவிகள் அவர் உரையை கண்டுகொள்ளவில்லை.
💪 ஆனால், இந்திய இளைஞர்கள் இம்முழக்கத்தின் மூலம் மேலும் உரமேறினர். பகத் சிங்கிற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. இதனால், ஏற்கெனவே சாண்டர்ஸ் கொலை வழக்கை தட்டி எடுத்து பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்தது ஆங்கிலேயே ஆட்சி.
💪 போராளிகளுக்கு சிறைச்சாலையும் ஓர் பாடசாலை என்பதற்கேற்ப, சிறையினுள் வாசித்துக்கொண்டே இருந்தார் பகத்சிங். 151 நூல்களை வாசித்து, ஆறு சிறிய நூல்களை வெளியிட்டார். கையில் புத்தகங்கள் இல்லாமல் பகத் சிங்கை பார்க்கவே முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்போடு மத, மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தார் என்பதற்கு அவர் எழுதிய "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" என்ற நூல் சான்றாக உள்ளது.
இறப்பு :
💪 பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் ஆங்கில அரசால் 1931ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள்.
