நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்திலுள்ள மர்மம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்திலுள்ள மர்மம்

bookmark

இரண்டாம் உலகப்போரில் செர்மனி, இத்தாலி தோற்கடிக்கப்பட்டு அச்சு நாடுகள் சார்பில் நிப்பான் மட்டுமே போரில் இருந்தது. நிப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மஞ்சூரியா மேல் ருசியா படையெடுத்து அதை ஆகசுட்டு 9-20, 1945 வரை நடந்த போரில் முழுமையாக கைப்பற்றிக்கொண்டது. பாங்காகில் இருந்த நிப்பானிய தொடர்பு அதிகாரி நேதாஜி பாங்காக்கில் இருந்து டோக்கியோ வழியாக மஞ்சூரியாவை அடைந்து அங்கிருந்து இருசியாவை அடைய ஒத்துக்கொண்டார். நேதாஜியின் கடைசி புகைப்படம் சைகோன் (தற்போதைய கோ சு மிங் ஆகசுட்டு 17, 1945) நகரில் எடுக்கப்பட்டதாகும் [37]. ஆகசுட்டு 23, 1945 அன்று நிப்பானிய செய்தி நிறுவனம் ஆகசுட்டு 18, 1945 அன்று தாய்பெயில் வானூர்தி தளத்தில் நடந்த விபத்தில் போஸ் இறந்ததாக அறிவித்தது [37]. ஆனால் தைவான் நாடு அப்படி ஒரு வானூர்தி விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது.

இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதைப் பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலாக மற்றும் பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர். சிலர் அவர் துறவி வேடத்தில் இந்தியாவில் வசிப்பதாகவும் சிலர் அவர் சோவியத் ஒன்றியத்துக்குத் தப்பி சென்று விட்டதாகவும் நம்புகின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956 ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை கொடுத்தனர்.[40][41] மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். அதன்படி 1970-ம் ஆண்டு ஜுலை மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை ஆணையம்” அமைக்கப்பட்டது. அவர் நிப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை தந்தார். 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , 'முகர்ஜி ஆணையம்', என மூன்று ஆணையங்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.