நெல்சன் மண்டேலா - 3

நெல்சன் மண்டேலா - 3

bookmark

தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

பின்னர் மண்டேலாவை காவலர் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

“ இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.”

1994 மே 10 ந் தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999 இல் பதவியை விட்டு விலகினார். இவர் 2வது முறை அதிபர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ம் தேதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 ஜூன் 23-ம் தேதி அறிவித்தது.

மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், 2013 ஜூன் 27-ம் தேதி ஜனாதிபதி யாக்கோபு சூமா தனது மொசாம்பிக் பயணத்தை இரத்து செய்தார். நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை நடத்தி வந்தனர். எனினும், 5 டிசம்பர் 2013 அன்று தனது 95வது அகவையில் காலமானார்.அவரது இறுதிச் சடங்கு 15 டிசம்பர் 2013 ஆண்டு நடைபெற்றது.