நெல்சன் மண்டேலா - 1

நெல்சன் மண்டேலா - 1

bookmark

நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா'. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார்.

மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

அப்போது 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958-ஆம் ஆண்டு 'வின்னி மடிகி லேனா' என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார். 1943 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.1948 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார் மெதுவாக . கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மை பொருப்புக்கு வந்தார். அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை Sharpeville நகரில் நடாத்தினர். பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றம் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்ப்பட்டனர். நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகு 1961 இல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.