நெப்போலியன் - 1
நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவராகவும் , அரசியல் தலைவராகவும் இருந்தவர் . தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவருடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவர் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
நெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகத்து 15 ஆம் தேதி, கோர்சிக்காவில் உள்ள அசாக்சியோ என்னும் நகரத்தில் காசா பொனப்பார்ட்டே எனப்படும் குடும்பத்தின் பரம்பரை வீட்டில் பிறந்தார் . இவரது பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இவர் இரண்டாமவர் . இவருக்குநெப்போலியன் டி பொனப்பார்ட்டே என்னும் பெயர் இட்டனர். அவர் பிறப்பதற்கு 15 மாதங்களுக்கு முன்புதான் கார்சிக்காவை ஃபிரான்ஸ் கைப் பற்றியது. தனது இருபதுகளில் தனது பெயரை பிரெஞ்சு மொழித் தோற்றம் கொடுப்பதற்காக நெப்போலியன் பொனப்பார்ட்டே என மாற்றிக் கொண்டார்.
இவரது தந்தை கார்லோ பொனப்பார்ட்டே ஒரு சட்ட வல்லுனர். 1777 ஆம் ஆண்டில் 16 ஆம் லூயியின் அரசவையில் கோர்சிக்காவின் பேராளனாக இவர் பொறுப்பு வகித்தார். நெப்போலியனுடைய இளமைப் பருவத்தில் முதன்மைச் செல்வாக்குச் செலுத்தியவர் இவனது தாய் லெட்டிசினா ராமோலினோ ஆவார். இவரது கடுமையான ஒழுக்கத்தினால் குழப்படிச் சிறுவனான நெப்போலியனைக் கட்டுப்பாட்டுக்குள் வைந்திருந்தார்.நெப்போலியனுக்கு யோசேப்பு என்னும் ஒரு அண்ணனும், லூசியன், எலிசா, போலின், கரோலின், யெரோம் ஆகிய இளையோரும் இருந்தனர். ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக யோசேப்புக்கு முன் பிறந்த இரண்டு பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.நெப்போலியன் தனது இரண்டாவது பிறந்தநாளுக்குச் சற்று முன்னராக, 1771 சூலை 21 ஆம் தேதி, அசாக்சியோ பேராலயத்தில் திருமுழுக்குப் பெற்றார் .
பிரபுத்துவ, வசதியான குடும்பப் பின்னணியும், குடும்பத் தொடர்புகளும், பொதுவான கோர்சிக்கர்களுக்குக் கிடைக்கப் பெறாத கல்விகற்கும் வாய்ப்புக்களை நெப்போலியனுக்கு அளித்தன.1779 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரான்சுத் தலை நிலத்தில் ஆட்டன் என்னும் இடத்தில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் பிரெஞ்சு மொழி கற்பதற்காகச் சேர்ந்தார் . மே மாதத்தில், பிரையேன்-லே-சத்து என்னும் இடத்தில் இருந்த படைத்துறை அக்கடமியில் சேர்ந்தார் . இவர் அதிக கோர்சிக்கத் தொனியுடனே பிரெஞ்சு மொழியைப் பேசியதுடன் சரியான எழுத்துக் கூட்டலையும் இவர் கற்றுக்கொள்ளவேயில்லை. இதனால் இவர் அவரது உடன் மாணவர்களது கேலிக்கு உள்ளானார். கணிதத்தில் திறமை பெற்றிருந்ததோடு, வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களிலும் நெப்போலியனுக்குப் போதிய அறிவு இருந்தது.
1785 செப்டெம்பரில் பட்டம்பெற்று வெளியேறிய நெப்போலியன், லா பெரே கனரக ஆயுதப் படைப் பிரிவில் இரண்டாம் லெப்டினன்ட் ஆகப் பணியில் அமர்ந்தார் . 1789 மே புரட்சி தொடங்கியதற்குப் பின் வரை, நெப்போலியன், வலன்சு, டிரோம், ஆக்சோன் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார் . இக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் விடுமுறை எடுத்துக்கொண்டு கோர்சிக்கா, பாரிசு ஆகிய இடங்களில் இருந்தார் . தீவிரமான கோர்சிக்கத் தேசியவாதியான நெப்போலியன் 1789ல் கோர்சிக்கத் தலைவரான பாசுக்குவாலே பாவோலி என்பவருக்குக் கடிதம் எழுதினார் .
"தேசம் அழிந்து கொண்டு இருக்கும் போது நான் பிறந்தேன். நமது கடற்கரைகளில் இறக்கப்பட்ட முப்பதினாயிரம் பிரான்சியர்கள் நமது சுதந்திரத்தை குருதி அலைகளுக்குள் அமிழ்த்தினர். இந்த வெறுக்கத்தக்க காட்சியே எனக்கு முதலில் புலப்பட்டது."
நெப்போலியன், புரட்சியின் தொடக்கக் காலத்தை கோர்சிக்காவில் செலவிட்டார் . அப்போது அரசியல் வாதிகள், புரட்சியாளர்கள், கோர்சிக்கத் தேசியவாதிகள் ஆகியோரிடையே நிகழ்ந்த மும்முனைப் போரில் யாக்கோபியப் புரட்சியாளர் தரப்பில் இணைந்து நெப்போலியன் போர் புரிந்தார். இப்போரில் நெப்போலியன் கோர்சிக்கப் போராளிகளின் லெப்டினன்ட் கர்னல் தரத்தில் தன்னார்வப் படைப் பிரிவொன்றுக்கு நெப்போலியன் தலைமை தாங்கினார் . அளவுக்கு மேலாகவே விடுமுறை எடுத்துக்கொண்டதோடு, கோர்சிக்காவில் பிரான்சுப் படையினருக்கு எதிராகப் போரில் ஈடுபட்டிருந்தபோதும் கூட, 1792 ஆம் ஆண்டில் நெப்போலியனுக்கு பிரான்சுப் படையில் "கேப்டன் " தரத்துக்குப் பதவி உயர்வு கிடைத்தது.
நெப்போலியனுக்குத் தமது திறமையைக் காட்டும் வாய்ப்பு 1793 இல் தூலோன் முற்றுகையின் போது ஏற்பட்டது. (அப்போது ஃபிரான்ஸ் அந்நகரை ஆங்கிலேயரிடமிருந்து திரும்பக் கைப்பற்றியது). அப்போது நெப்போலியன் பீரங்கிப் படை அதிகாரியாக இருந்தார். (அதற்குள்ளாக அவர் தமது கார்சிக்கா தேசியவாதக் கொள்கையைக் கைவிட்டுத் தம்மை ஒரு ஃபிரெஞ்சுக் குடிமகனாகவே கருதினார்). தூலோன் வெற்றி அவருக்குப் பதவி உயர்வை அளித்தது. 1796 இல் அவர் இத்தாலியில் ஃபிரெஞ்சுப் படையின் தளபதியானார். அங்கு 1796 - 97 இல் அவர் மாபெரும் வெற்றிகளைப் பெற்றார். பிறகு வீரராக அவர் பாரிஸ் திரும்பினார்.
1798 இல் நெப்போலியன் எகிப்தின் மீது படையெடுத்தார். அப்படையெடுப்பு படுதோல்வியாக முடிந்தது. நிலத்தில் நெப்போலியனின் படைகள் பொதுவாக வெற்றிப் பெற்றன. ஆனால் ஆங்கிலேய கப்பற்படை நெல்சன் பிரபுவின் தலைமையில் ஃபிரெஞ்சு கப்பற்படையை அழித்தது. 1799 இல் நெப்போலியன் தம் படையை எகிப்தில் விட்டு விட்டு ஃபிரான்ஸ் திரும்பினார்.
ஃபிரான்ஸ் திரும்பிய நெப்போலியன் ஃபிரெஞ்சு மக்கள் தம் இத்தாலியப் படையெழுச்சியின் வெற்றிகளை மட்டும் நினைத்ததையும், எகிப்திய படையெடுப்பின் படுதோல்வியை மறந்து விட்டதையும் கண்டார். இதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் அபேசியேயுடனும் பிறருடனும் சேர்ந்து அரசாங்கத்தைக் கவிழ்த்தார். அதன் விளைவாக கான்சல்களின் குழு ஆட்சி ஏற்பட்டது. நெப்போலியனின் படைத்துறை வல்லாட்சிக்கு ஒரு முகமூடியாகவே இருந்தது. அவரோ அரசாங்கத்தைக் கவிழ்த்த பிறரையும் விரைவில் விஞ்சினார்.
