நீர் விளையாட்டுப் படலம் - 1040

bookmark

ஆடவரின் காம வேட்கை

1040.

எரிந்த சிந்தையர். எத்தனை என்கெனோ?
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய்.
தெரிந்த கொங்கைகள். செவ்விய நூல் புடை
வரிந்த பொற் கலசங்களை மானவே!
 
அழி     சாந்து போய்  - (நீர்  விளையாட்டால்  பூசிய) சந்தனம்
அழிந்து   போய்;  அரிந்த  கூர்  உகிரால்  - அரிந்த  கூரிய  நகக்
குறிகளோடு; தெரிந்த கொங்கைகள் - தோன்றிய (மகளிரின்) தனங்கள்;
செவ்விய  நூல்புடை  வரிந்த  -  அழகிய  நூல்களைப் பக்கங்களில்
சுற்றியுள்ள;  பொன்  கலசங்கள் மான - பொற்குடங்களை ஒத்திருக்க;
எரிந்த  சிந்தையர்  -  (அது  கண்டு)  மனம் கொதித்த ஆடவர்கள்;
எத்தனை என்கெனோ? - எத்தனை பேர் (நான்) சொல்ல வல்லனோ?
(வல்லேன் அல்லேன்) 

உகிர்:     நகம்.  நகக்குறியைக்  குறித்தது  - ஆகுபெயர். நூலைப்
பக்கங்களில்     சுற்றிய      கலசங்கள்     வேள்விக்குரியனவாதலால்
மைந்தர்க்குக்  காம  வேள்வி  நினைவுக்கு  வந்தது. நகக் குறி கீறல்கள்
பட்ட  தனங்கள்.  வேள்விக்கு  நூல்  சுற்றிய பொற்  குடங்கள் போல்.
நீராடலால்   சந்தனம்   கரைந்த   போது   காட்சிப்பட்டதால்.   காம
வேள்வியின்   கனல்பற்றி  எரிந்த   சிந்தையர்   எத்தனைபேர்   என
எண்ண   இயல்வில்லை  என  வியந்தார்.  சந்தனங் கரைந்தது மகளிர்
மார்பில் அதனால். எரிய வேண்டியதோ அம்மகளிர்  மார்பு.  எரிவதோ
மைந்தர் மார்பு! என்ன விந்தை இது! என வியக்க வைக்கிறார்.      27