நீர் விளையாட்டுப் படலம் - 1025

bookmark

மகளிர் சூழநின்ற ஆடவன் தோற்றம் ((1025-1027))

1025.

குடைந்து நீராடும் மாதர்
   குழாம் புடைசூழ. ஆழித்
தடம் புயம் பொலிய. ஆண்டு. ஓர்
   தார் கெழு வேந்தன் நின்றான் -
கடைந்த நாள். அமிழ்தினோடும்
   கடலிடை வந்து தோன்றும்
மடந்தையர் சூழ நின்ற
   மந்தரம் போல மாதோ.
 
கடைந்த  நாள் கடலிடை அமிழ்தினோடும் வந்து தோன்றும் -
திருப்பாற்கடலைக்   கடைந்த    பொழுது   நடுவே  அமிழ்தத்தோடும்
எழுந்து  தோன்றிய;  மடந்தையர்  சூழ நின்ற  - (அரம்பை. ஊர்வசி.
திலோத்தமை  முதலிய)  தேவ   மங்கையர்கள்   புடைசூழ  விளங்கும்;
மந்தரம்  போல -  மந்தர மலையைப் போல; ஆண்டு. ஆழித் தடம்
புயம் பொலிய -  அவ்விடத்திலே வாகுவலயங்கள் பொருந்திய அகன்ற
தோள்கள்  அழகுற  விளங்க;  தார்கெழு  ஓர் வேந்தன் - மாலைகள்
நிறைந்த  ஒரு  மன்னன்; நீர் குடைந்து ஆடும் மாதர்குழாம் - நீரில்
மூழ்கித்திளைத்து  ஆடும்  மகளிரின்  கூட்டம்; புடைசூழ நின்றான் -
(தன்னைச்) சுற்றி நிற்க நின்றான்; மாது. ஓ - அசைகள்

மந்தரம்    போலும்  ஓர்வேந்தன். மடந்தையர் சூழ நின்றான் என்க.
படலத்தின்  தொடக்கப் பாடலில்  துருவாச முனிவர் சாபத்தால் கடலில்
மூழ்கியவர்கட்கு.  நீரில்  மூழ்கியவரை   உவமித்தார். இங்கு. மறவாமல்.
மூழ்கியவர்  எழுந்தமையை  வர்ணித்தார்.  அதே   உவமை  கொண்டு
எழுந்தார்  என்றார்.  நீர்  நிலைக்குப்பாற்  கடலும்.   நீர்நிலைக்  கண்
தோன்றும்  தலைவனுக்கு மந்தர மலையும். அவனைச்   சூழ்ந்து  நின்ற
மகளிர்க்கு  திருப்பாற்  கடலிலிருந்தும்  எழுந்த  தெய்வ   மங்கையரும்
உவமம் ஆயினர்.                                           12