நீர் விளையாட்டுப் படலம் - 1020
1020.
பண் உளர் பவளத் தொண்டை.
பங்கயம் பூத்தது அன்ன
வண்ண வாய். குவளை வாள் - கண்.
மருங்கு இலாக் கரும்பின் அன்னார்.
உள் நிறை கயலை நோக்கி.
‘ஓடு நீர்த் தடங்கட்கு எல்லாம்
கண் உள ஆம்கொல்?’ என்று.
கணவரை வினவுவாரும்;
பவளத் தொண்டை - பவளத்தையும் கொவ்வைக் கனியையும்;
பங்கயம் பூத்தது என்ன - தாமரைப் பூ. தன்னிடத்தே பூத்தது
போன்ற; பண்உளர் வண்ணவாய் - இசை ஒலிக்கும் அழகிய
வாயினையும்; குவளை வாள்கண் - குவளைமலர்போன்ற ஒளிமிக்க
கண்களையும்; இலா மருங்கு கரும்பின் அன்னார் - இல்லையென்று
சொல்லத்தக்க நுண்ணிய இடையினையுமுடைய கரும்பு என(க்
கணவர்க்கு) இனிக்கத்தக்க மகளிர்; உள்நிறை கயலைநோக்கி -
(தடாகங்களின்) உள்ளே நிறைந்துள்ள கயல்மீன்களைப் பார்த்து;
நீர்த்தடங்கட்கு எல்லாம் - நீர்நிலைகட்கு எல்லாம்; ஓடும் கண்உள
ஆம்கொல் என்று - ஓடிக் கொண்டேயிருக்கும் கண்கள் உளவோ
என்று (ஐயுற்று); கணவரை வினவுவாரும் - தங்கள் கணவரைக்
கேட்பவர்களும்.
“பேதைமை என்பதும் மாதர்க்கு ஓர் அணிகலம்” ஆதலின். கயல்
மீன்களை. நீர்நிலைகளின் கண்களோ? என்று கேட்டதும். அதனால்
ஓர் அழகாயிற்று. பின்வருவனவற்றிற்கும் இவ்வாறே கொள்க.
கொவ்வைக் கனியையும் பவளத்தையும் தன்னகத்தே கொண்டு
தாமரை பூத்தது போல் சிவந்த இதழ்களைக் கொண்டது முகம்
என்றார். இல்பொருள் உவமையணி. கரும்பை மகளிர்க்கு
உவமையாக்குதல் மரபு. “உண்பார்க்கு மெய்முழுதும்
இனிதாயிருத்தலின் கரும்பு என்றார்” என்பார் நச்சினார்க்கினியர்
(சீவக. 2453. உரை). அவர் பேச்செல்லாம் இசையாய் முடிதலின் “பண்
உளர் வாய்” என்றார். 7
