நீர் விளையாட்டுப் படலம் - 1019
1019.
மின் ஒத்த இடையினாரும்.
வேய் ஒத்த தோளினாரும்.
சின்னத்தின் அளக பந்தி
திருமுகம் மறைப்ப நீக்கி.
அன்னத்தை. ‘வருதி. என்னோடு
ஆட’ என்று அழைக்கின்றாரும்;
பொன் ஒத்த முலையின் வந்து
பூ ஒற்ற. உளைகின்றாரும்;
மின் ஒத்த இடையினாரும் - மின்னலைப்போன்ற
இடைகளையுடையவர்களும்; வேய் ஒத்த தோளினாரும் - (இள)
மூங்கிலைப் போன்ற தோள்களையுடையவரும் ஆகிய சில மகளிர்;
சின்னத்தின் அளகபந்தி - விடுபூக்களை யணிந்த முன்உச்சி
மயிர்களின் வரிசை; திருமுகம் மறைப்ப நீக்கி - நீரில் மூழ்கி
எழுகையில் (தம்) அழகு முகத்தை மறைக்க (அவற்றைக் கரங்களால்)
விலக்கி; அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று
அழைக்கின்றாரும் - (அப்போது அருகில் நீந்திய) அன்னப்
பறவையைப் (பார்த்து) ‘என்னோடு விளையாட வா’ என்று
அழைக்கின்றவர்களும்; பொன் ஒத்த முலையின் - (தேமல்
பரந்திருத்தலால்) பொன்நிறங் கொண்டுள்ள தனங்களின் மேல்; வந்து
பூ ஒற்ற உளைகின்றாரும் - (அலையடித்தலால்) பூக்கள் வந்து
படுவதற்கும் (மனம்) வருந்துகின்றவர்களும்;-
சின்னம் - விடுபூ. எப்போதும் மலரோடும் கூந்தல் இருக்க
வேண்டுதலால். குளிக்கையில் சின்னச்சின்ன விடுபூக்களை மகளிர்
அணிந்திருந்தனர். பூப்பட்டாலும் வருந்துவன என்று தனங்களின்
மென்மை சுட்டியவாறு. கவிஞர் கற்பனைக் கண்ணால்
கண்ணாரக்கண்டு காட்சிகளைக் கற்பார்க்குக் காட்டும் நுண்மை.
“சின்னத்தின் அளகபந்தி திருமுகம் மறைப்ப. நீக்கி” என்பதனால்
விளங்கும். மனப்படங்களை அடுக்கடுக்காகத் தரும் அளவிற்கு ஒரு
காவியம்உயர்கிறது என்பதற்கு இத்தொடரும் சான்றாம். “பொன்
வைத்த இடத்தில் பூவைத்த” நயமும் காண்க. 6
