நீர் விளையாட்டுப் படலம் - 1014
ஆடவரும் மகளிரும் தடங்கள் நோக்கி வருதல்
அறுசீர் விருத்தம்
1014.
புனை மலர்த் தடங்கள் நோக்கி.
பூசல் வண்டு ஆர்த்துப் பொங்க.
வினை அறு துறக்க நாட்டு
விண்ணவர் கணமும் நாண.
அனகரும். அணங்கனாரும்.
அம் மலர்ச் சோலைநின்று.
வன கரி பிடிகளோடும்
வருவன போல வந்தார்.
அனகரும் அணங்கு அ(ன்)னாரும் - குற்றமற்ற ஆடவரும்
தெய்வமகளிர் போன்ற பெண்டிரும்; வினையறு துறக்க நாட்டு -
வினை (த் துன்பம்) அற்ற சுவர்க்க நாட்டில் உள்ள; விண்ணவர்
கணமும் நாண - தேவர் இனமும் (இவர்களுடைய அழகைக் கண்டு)
வெட்கி நாணம் கொள்ளுமாறு; பூசல் வண்டு ஆர்த்துப் பொங்க -
ஆரவாரம் செய்யும் குணம்கொண்ட வண்டுகள் ஒலித்துப்
பொங்கியெழ; அம் மலர்ச் சோலைநின்று - அந்தப்
பூஞ்சோலையிலிருந்து; புனைமலர்த் தடங்கள்நோக்கி - அழகிய
மலர்க்குளங்களை நோக்கி; வனகரி பிடிகளோடு - வனங்களில் வாழும்
ஆண் யானைகள். (தங்கள்) பெண் யானைகளோடு; வருவன என்ன
வந்தார் - வருதலைப் போல வந்தார்கள்.
வினை - துன்பம். ஆகுபெயர். அனகர் - குற்றமற்றவர். பாவம்
அற்றவர். நாட்டு யானைகள் அடிமைப்படுதல் போலக் காட்டு
யானைகள். யாருக்கும் அடிமைப் படாதன வாதலின். உரிமைமிக்க
அவ்வாடவரையும மகளிரையும் “வனகரி”களுக்கு உவமித்தார்.
வனங்களில் வாழும் யானைகள் உச்சிப் போதில் வெப்பம் தீரச்
சுனையாடும் வழக்கம் அறிந்திருந்த கவிஞர்பிரான். கோசல நாட்டு
மகளிரையும் மைந்தரையும் “வனகரி பிடிகளோடு வருவன என்ன
வந்தார்” என்று உவமித்து மகிழ்ந்தார். அவ்வுலகத்தோர் வருவதற்கு
அருத்தி (விருப்பம்) புரிகின்றது அயோத்தி மாநகரம்” (கம். 93)
ஆதலின். அயோத்தி நகர மகளிரும் மைந்தரும் “துறக்க நாட்டு
விண்ணவர் கணமும்” நாணும் பேரழகோடு மலர்ப் பொய்கைகளை
நோக்கி வருங் காட்சியை. கவிஞர் காட்டுகின்றார். “வனகரி
பிடிகளோடு வருவன என்ன வந்தார்” என்னும் உவமையினால்
வலிவோடும் பொலிவோடும் துணைவியரை அணைத்தவாறு
ஆடவர்கள் பெருமிதப் பீடுநடையோடும் தடாகங்களில் இறங்கும்
காட்சியை மன ஓவியப்படுத்துகிறார். 1
