நிக்கோலஸ் கோப்பர்நிகஸ்

bookmark

நிக்கோலஸ் கோப்பர்நிகஸ் சூரிய மையக் கொள்கையினைக் கண்டறிந்தவர். இன்னும் சொல்லப்போனால், 2000 ஆண்டுகளாக மக்கள் நம்பிக் கொண்டிருந்த புவிமையக் கொள்கையை மாற்றி சூரிய மையக் கொள்கையை எடுத்து வைத்தார். இவர் 1473 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் நாள்.போலந்தில் உள்ள டோருன் என்ற நகரத்தில் பிறந்தார்.

இளமைப் பருவத்தில் இருந்தே வானவியல் மீது ஆர்வம் கொண்ட கோப்பர்நிகஸ் போலந்து நாட்டின் தலைநகரில் தான் கல்வியும் கற்றார்.இத்தாலிக்குச் சென்று மதக் கல்வியைப் படித்தார்.அங்கும் சில விஞ்ஞானிகளுடன் சேர்ந்து கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.மதக் கல்வியை நல்ல முறையில் முடித்த கோபர்நிகஸ் அவர்களுக்கு ஒரு மடாலயத்தில் நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைத்தது. தனது திறமையால் அம்மடாலயத்தின் பேராயர் பதவியையும் அடைந்தார். பகலில் இறையியல் பணியையும், இரவில் அறிவியல் பணியையும் செய்யத் தொடங்கினார் கோபர்நிகஸ்.இறையியலை விட, அறிவியலில் அவருக்கு ஈடுபாடு அதிகம் இருந்தது.அக்காலத்தில், மக்கள் ஆதாரம் இல்லாத மனதில் தோன்றிய எண்ணங்களை எல்லாம் அறிவியல் என்று சொன்னார்கள். ஆனால் ,கோபர்நிகஸ் சற்று மாறுபட்டு , அறிவியல் என்பது ஆய்வுக்கு உட்பட்டு நிரூபிக்கப்பட வேண்டியது என்றார். எல்லோரும் அக்காலத்தில் சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்று நினைத்தனர். ஆனால், இல்லை , இல்லை பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என்று கோபர்நிகஸ் அவர்களுக்கு மனதில் பட்டது.

அவரது காலத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க விஞ்ஞானி ஃப்டோளெமி உருவாக்கிய புவிமையக் கொள்கை நடைமுறையில் இருந்தது. அதாவது புவி நிலையாக நிற்பதாகவும், சூரியனிலிருந்து மற்ற கோள்கள் யாவும் புவியை ஒரு வட்டப் பாதையில் சுற்றி வருவதாகவும் நம்பப்பட்டது. நட்சத்திரங்கள் யாவும் ஒரு மிகப் பெரிய கோள இடத்தின் வெளிப்புறத்தில் நிலையாக நிற்பனவையாகவும் கருதப்பட்டன. ஆனால், நாளாக நாளாக ஃப்டோளெமியின் வட்டப்பாதை விளக்கங்கள் சரியாக இல்லை. காரணம் அவர் குறித்த பாதையில் கோள்கள் தென்படாமல் விலகித் தெரிந்தன. அடுத்து வந்தவர்கள் அனைவரும் அவரைப் பின்பற்றியே வட்டப்பாதையை நீள் வட்டப் பாதையாக மாற்றிப் பார்த்தனர். அப்போதும் தவறு ஏற்பட ஆரம்பித்தது. நீள் வட்டங்களுக்குள் நீள் வட்டங்கள் என்று முயற்சி செய்தனர். அப்போதும் சிறிய அளவில் தவறுகள் ஏற்பட்டன.

20 ஆண்டுகளாகத் தினமும் கோள்கள் இருக்கும் இடத்தினைக் குறித்து வைத்து அதனுடன் ஃப்டோளெமி மற்றும் மற்றவர்களின் கணிப்பையும் வைத்துச் சரிபார்த்த நிக்கஸ் இரண்டும் கொஞ்சமும் ஒத்துப் போகாததைப் பார்த்து அயர்ச்சியுற்றார். சரி, ஒவ்வொரு நகரும் கோளிலிருந்து இன்னொரு நகரும் கோள் எவ்வாறு பார்வைக்குத் தெரியும் என்று கணித்துப் பார்த்தார். அவை சரியாக நீள் வட்டங்களில் நகர்வது கண்டு ஆச்சரியமுற்றார். அப்படியானால் புவியும் ஒரு நகரும் கோளாக இருந்தால் என்னாகும்? என்று யோசனை தோன்றியது. இவ்வாறு அவர் முடிவுக்கு வரக் காரணம், ஒவ்வொரு கோளும் ஆண்டு முழுதும் வெவ்வேறு இடத்திலேயே தோன்றின. அது அவருக்குக் குழப்பமளித்தது. புவி மையமானதாக நகராததாக இருந்து கோள்கள் வட்டப்பாதையில் சுற்றி வந்தால் கோள்கள் மீண்டும் இருந்த இடத்திற்கே வரவேண்டுமே! அவ்வாறு வரவே இல்லையே! எனவே தான் புவியும் நகர்கின்றதோ என்று அவருக்குத் தோன்றியது.

அவரது 20 ஆண்டு கால ஆராய்ச்சியில் சூரியன் மட்டுமே தனது அளவு மாறாமல் தெரிகின்றது என்றும் மற்ற கோள்கள் சிறியதாகவும் பின்னர் பெரியதாகவும் தோன்றுகின்றன என்றும் அறிந்தார். ஆக, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் மாறுவதில்லை என்று உணர்ந்தார். ஆக, பூமி நகர்கின்றது என்பது ஒரு முடிவு. சூரியனுக்கும் பூமிக்கும் தூரம் மாறவில்லை என்பது ஒரு முடிவு. இரண்டையும் சேர்த்து வைத்துப் பார்த்தார். சூரியனை நடுவே கொண்டு பூமி சுற்றினால் மட்டுமே இது சாத்தியம் என்ற முடிவுக்கு வந்தார். அவரது கண்டுபிடிப்பை மையமாகக் கொண்டு அளந்து பார்த்தார். என்ன ஒரு அதிசயம்! சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் யாவும் ஒரே வட்டப்பாதையில் சுழன்று வந்தன. நாளை இந்தக் கோள் இங்கே தான் தெரிய வேண்டும் என்று அவரால் எளிதாக யூகிக்க முடிந்தது. என்ன ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு?

அந்த ஆராய்ச்சி குறிப்புகளை 400 பக்கங்கள் கொண்ட நூலாக உருவாக்கி வைத்து இருந்தார். அந்த நூலுக்கு " தி ரெவெல்யூஷனிபஸ்" என்ற தலைப்பைக் கொடுத்து இருந்தார். அவரது அந்த ஆராய்ச்சி நூலை எழுதி முடிக்க அவருக்கு முப்பது ஆண்டு காலம் ஆனது.அவர் அந்த நூலை எழுதி முடிக்கும் போது, அவருக்கு வயது அறுபத்தொன்பது. தனது கண்டுபிடிப்புக்களை ஓவியமாகவும் தீட்டி வைத்து இருந்தார் கோபர்நிகஸ். அந்த ஓவியத்தில் பூமி, சனி, வியாழன், செவ்வாய், சுக்கிரன், புதன் போன்ற கோள்களும் பூமியுடன் சேர்ந்து நீள் வட்டப் பாதையில், நிலையான சூரியனை சுற்றி வருவது போல வரைந்து இருந்தார். மேலும், பூமி கோல வடிவமானது என்பதை நிரூபிக்க அந்த நூலில் ஒரு உதாரணத்தையும் சொல்லி இருக்கிறார் கோபர்நிகஸ். அது யாதெனில்

பாய் மரக் கப்பல் ஒன்றின் உச்சியில் விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்தால் அந்தக் கப்பல் கரையில் இருந்து கடலில் போகும் போது உச்சியில் உள்ள விளக்கு கீழே தாழ்ந்த படியே செல்வது போல இருக்கும். கடைசியில் அந்த விளக்கு கரையில் நின்று பார்போரின் பார்வையில் இருந்து மறைந்து விடுகிறது.இதற்குக் காரணம் பூமி உருண்டையாக இருப்பது தான் என்றார் கோபர்நிகஸ்.

ஆனால், சோகம் என்னவென்றால், ஏற்கனவே இருப்பதை மறுத்துச் சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவரது ஆராய்ச்சிக்குறிப்புகளைப் பதுக்கியே வைத்திருந்தார். பிற்பாடு கோபர்நிகஸ் மூலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு நினைவை இழந்தார்.இவ்வளவு திறமை வாய்ந்த அறிவியல் அறிஞர் 1543 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது கண்டுபிடிப்புகள் அவரது வாழ்நாளுக்குப் பிறகே வெளிவந்தன. அதன் பின்னரும் 60 ஆண்டுகளாகப் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன. கெப்ளரும், கலிலியோவும் பல சோதனைகள் மூலம் சூரியமையக் கொள்கையினை நிரூபித்து கோப்பர்நிக்கஸின் கண்டுபிடிப்பு சரியானதென்று உறுதி செய்த பின்னரே அனைவரும் கோபர்நிகஸ் தத்துவத்தை ஏற்றுக் கொண்டனர்.