நற்செய்திகளில் இயேசுவின் பொது வாழ்க்கை அல்லது இறையரசுப் பணி
இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார். அப்பணியைக் கடவுளே தம்மிடம் ஒப்படைத்ததையும் அறிந்தார். இயேசு உண்மையிலேயே கடவுளின் மகன் என்னும் உண்மையும் அவர் பெற்ற திருமுழுக்கின் போது வெளிப்படுத்தப்பட்டது.
ஆக, கடவுள் தம்மை ஒரு சிறப்புப் பணி ஆற்றிட அனுப்பியுள்ளார் என்பதை உளமார உணர்ந்த இயேசு "கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்து கொண்டிருக்கின்றது" என்னும் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார். கடவுளின் ஆட்சியில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்றால் அவர்கள் தம் பழைய வாழ்க்கை முறையை விட்டு விட்டு, புதியதொரு வாழ்க்கை முறையைத் தழுவ வேண்டும் என்று இயேசு போதிக்கலானார்.
இயேசு தம் பொதுப் பணியை நாசரேத்து தொழுகைக் கூடத்தில் தொடங்கினார் என்று லூக்கா நற்செய்தி கூறுகிறது (காண்க: லூக்கா 4:16-21). நாசரேத்து ஊரில் யூதர்களுக்கு ஒரு தொழுகைக் கூடம் இருந்தது. அங்கு இயேசு சென்று, பண்டைக்கால இறைவாக்கினருள் ஒருவராகிய எசாயா இறைவாக்கினரின் ஏட்டுச் சுருளிலிருந்து ஒரு பகுதியை மக்கள் முன்னிலையில் வாசித்து அறிக்கையிட்டார்.
எசாயா இறைவாக்கினரின் நூலிலிருந்து இயேசு வாசித்த பகுதி இதோ:
"ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவும்...என்னை அனுப்பியுள்ளார்." (எசாயா 61:1-3)
எசாயா நூலில் வருகின்ற "ஒடுக்கப்பட்டோர்", "உள்ளம் உடைந்தோர்", "சிறைப்பட்டோர்", "கட்டுண்டோர்" ஆகிய அனைவருமே "ஏழைகள்." அவர்களுக்கும், எல்லாவித அடக்குமுறைகளால் துன்புறும் அனைவருக்கும் விடுதலையும் விடியலும் வழங்குபவர் இறைவன். அதுவே கடவுளடமிருந்து வருகின்ற "நற்செய்தி" (நல்ல + செய்தி). இப்பின்னணியில் இயேசுவின் போதனைப் பணி புரிந்துகொள்ளப்பட வேண்டும். மக்களுக்கு வி்டுதலை வழங்க இயேசு கையாண்ட ஒரு வழியே அவரது போதனைப் பணி.
"செய்தி" என்னும் சொல்லுக்கு "நடந்த நிகழ்ச்சி" என்பது பொதுவாகத் தரப்படும் பொருள். ஆகவே கடந்த காலம் பற்றிய குறிப்பு அதிலே உண்டு. அதே நேரத்தில், அண்மையில் நடந்த நிகழ்ச்சி, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி "செய்தியாக" கொள்ளப்படுகிறது. இயேசு வழங்கிய போதனை நம்பிக்கை, உற்சாகம், ஊக்கம், எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொணர்ந்த செய்தியாக அமைந்ததால் அது உண்மையிலேயே "நற்செய்தி" ஆயிற்று.
புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவை மெசியா, மானிட மகன், ஆண்டவர், இறைவாக்கினர், இறைமகன் என்னும் பல பெயர்களால் அழைக்கின்றன. இயேசு தம்மைப் பற்றிப் பேசும்போது மானிட மகன் என்னும் பெயரையே கையாளுகின்றார்.
