நற்செய்திகளின்படி இயேசுவின் குல மரபும் உறவுகளும்
இயேசுவின் தாயாரான மரியாவின் கணவர் யோசேப்பு என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார் (காண்க: மத்தேயு 1:1-16; லூக்கா 3:23-38). மத்தேயுவும் லூக்காவும் தருகின்ற பட்டியல்படி, இயேசு ஆபிரகாம் மற்றும் தாவீது அரசன் வழி வருபராவார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கு பின்னர் குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. இயேசு பகிரங்க வாழ்க்கையை, அதாவது போதிக்கும் பணியை ஆரம்பிக்கும் முன்னரே யோசேப்பு இறந்திருக்க கூடும் என ஊகிக்கப்படுகிறது. இது இயேசு சிலுவையில் தொங்கும் போது தம் தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு அவர்தம் அன்புச்சீடருக்குப் பணித்ததிலிருந்து தெளிவாகிறது (யோவான் 19:25-27).
விவிலியத்தில், யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் சகோதரர் என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் (காண்க: மத்தேயு 13:55-56; மாற்கு 6:3), அவர்கள் யோசேப்புக்கும் மரியாவுக்கும் பிறந்தவர்களா அல்லது சகோதரர்கள் முறை கொண்டவர்களா என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் முதலாம் நூற்றாண்டின் யூத வரலாற்று ஆசிரியரான யோசேஃபசு என்பவரும் யாக்கோபை இயேசுவின் சகோதரர் என குறிப்பிடுகிறார். அவருடைய கூற்று நற்செய்தி நூல்கள் தரும் செய்தியோடு ஒத்திருக்கின்றன.
புனித பவுலும் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் "ஆண்டவரின் சகோதரரான யாக்கோபு" (கலாத்தியர் 1:19) என குறிப்பிடுகிறார். மேற்கூறிய இடங்களில் எல்லாம் adelphos என்னும் கிரேக்க மூலச் சொல்லே சகோதரர் என்று பெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு தாய் வழிவராச் சகோதரரையும் குறிக்கலாம்; பெற்றோரின் சகோதரர்களுக்குப் பிறந்தோரையும் குறிக்கலாம். மேலும், அக்காலத்தில் ஒரே நம்பிக்கைக்குள் ஒன்றுபட்டு இருந்தவர்களையும் "சகோதரர்கள்" என்று அழைப்பது வழமையாயிருந்தது. இன்னொரு கருத்துப்படி, மரியாவின் கணவரான யோசேப்பு ஏற்கனவே மணமாகி, தம் மனைவி இறந்த பின்னர் மரியாவை மணந்து கொண்டார் எனவும், முந்திய மணத்திலிருந்து அவருக்குப் பிறந்த குழந்தைகளே இயேசுவின் சகோதரர் என்று குறிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே நற்செய்தி நூல்களில் இயேசுவின் சகோதரர் என்று குறிப்பிடப்படுவோர் மரியாவுக்கு பிறந்தவர்கள் இல்லை; மரியா கணவனின் துணையின்றி இயேசுவைக் கருத்தரித்தார் என்றும், எப்போதும் கன்னியாகவே வாழ்ந்தார் என்றும் கத்தோலிக்கர் உட்பட பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்று நம்புகின்றன; இதுவே அச்சபைகளின் போதனையும் ஆகும்.
புதிய ஏற்பாட்டில் யோவானின் தாயாகிய எலிசபெத்து மரியாவின் உறவினர் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கிடையே நிலவிய உறவு முறை யாதென்று குறிப்பிடப்படவில்லை.
