நகர் நீங்கு படலம் - 1847
1847.
‘நீர் உளஎனின் உள, மீனும் நீலமும்;
பார் உளஎனின் உள, யாவும்; பார்ப்புறின்.
நாள் உள தனு உளாய்! நானும் சீதையும்
ஆர் உளர்எனின் உளம்? அருளுவாய்!’ என்றான்.
‘நார் உள தனு உளாய்! - நாணை உடைய வில்லை ஏந்தியவனே;
பார்ப்புறின் ஆராய்ந்து பார்த்தால்; நீர் உள எனின் - தண்ணீர்
இருக்குமானால்; மீனும்நீலமும் உள - மீன்களும், கருங்குவளையும்
உள்ளனவாம்; பார் உள எனின் - இந்தப்பூமி இருக்கும் எனில்; யாவம்
உள - எல்லாப் பொருளும் உள்ளனவாம் (அவை போலவே); நானும்
சீதையும் -; ஆர் உளர் எனின் உளம் - யார் இருந்தால்
இருக்கின்றவர்கள்ஆவோம்; அருளுவாய் ’ - கூறுவாயாக;’ என்றான்-.
தன்ணீர் உள்ள வரை மீனும் நீலமும் இருக்கும். அதுபோல, இராமன்
உள்ளதுணையும்இலக்குவனும் சீதையும் உளர் என்பதாம். மீன் நீர் உள்ள
அளவும் இருந்து நீர்வற்றிஇல்லாமற் போனால் இறந்துபட்டொழியும். அது
இலக்குவனுக்கு உவமை. நீலம் நீர் உள்ள துணையும்வாழும் நீர்வற்றி
இல்லாமற் போனால் காய்ந்து கிழங்காகக் கிடக்கும்; மீண்டும் நீர்வந்துழி
முளைவிட்டுத் தளிர்த்து மேல் வந்து பூக்கும். அது சீதைக்கு உவமை.
பின்னர்ச்சிலகாலம் இராமனைப் பிரித்து அசோக வனத்தில் இருந்து
வற்றிக் கிடந்து மீண்டும்இராமனைக் கண்டு கூடித் தளிர்த்தாள் ஆதலின்,
சிறிதளவு கூடத் தன்னால் பிரிந்து வாழ இயலாது என்பான் இலக்குவன்
தன்னை மீனாகச் சொல்லிக்கொண்டான் என்பது நயம், பூமி இருந்தால்
எல்லாப் பொருளும் இருக்கும். அது போல இராமன் இருந்தால்
அனைவரும் வாழ்வர். ‘அருளுவாய்’ என்றுஇராமனையே பதில் கூறும்படி
வைத்த இலக்குவனது சாதுரியம் ஈண்டுநுகரத்தக்கது. 152
