நகர் நீங்கு படலம் - 1839

மரவுரியை இலக்குவன் பெறல்
இலக்குவன் மரவுரியை ஏற்றுத் தாயைப் பணிதல்
1839.
வாள் நித்தில வெண் நகையார் தர,
வள்ளல் தம்பி,
‘யாணர்த் திருநாடு இழப்பித்தவர்
ஈந்த எல்லாம்
பூணப் பிறந்தானும் நின்றான்;
அவை போர் விலோடும்
காணப் பிறந்தேனும் நின்றேன்;
அவை காட்டும் ’ என்றான்.
வாள் நித்தில வெண் நகையார் தர- ஒளியுடைய முத்துப் போலும்
வெள்ளிய பற்களை உடையாராய ஏவல் மகளிர் கொடுக்க; வள்ளல்-
இராமன் தம்பியாயஇலக்குவன்; ‘யாணர்த் திருநாடு இழப்பித்தவர்-
புதிய வருவாய்களைச் சிறந்த கோசல நாட்டை இழக்கும்படிசெய்த
கைகேயி; ஈந்த எல்லாம் - கொடுத்த எல்லாப்பொருளையும்; பூணப்
பிறந்தானும் நின்றான் - அணிந்து கொள்ளப் பிறந்தவனாகிய என்
தமயனும்இருக்கின்றான்; அவை- அந்தக் காட்சிகளை;போர் விலோடும்
- போரில்ஆற்றல் காட்டும் வில்லைச் சுமந்து கொண்டே; காணப்
பிறந்தேனும் நின்றேன் -காண்பதற்குப் பிறந்த நானும் இருக்கின்றேனே;
அவை காட்டும்’ - அவற்றைக்காண்பியுங்கள்;‘என்றான் -
நாடு இழப்பித்த கைகேயியை ஒன்றும் செய்ய இயலாத எனக்குப்
‘போர் வில்’ எதற்காகஎன்ற தன்னிரக்கமாகக் கூறியது ‘போர்விலோடும்’
என்ற தொடர். 144