நகர் நீங்கு படலம் - 1831

இராமன் மறுமொழி
1831.
‘நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை
நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு
அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு
யாது உளது ஊற்றம்?’ என்றான் -
தேன்சொல் கடந்தான்,
வடசொல் - கலைக்கு எல்லை தேர்ந்தான்.
தென்சொல் கடந்தான் - தமிழ் மொழியின் எல்லை கண்டவனாம்;
வடசொல்கலைக்கு எல்லை தேர்ந்தான் - வடமொழிச் சாத்திரங்களின்
முடிவிடத்தை ஆராய்ந்து அறிந்தவனும் ஆகிய இராமன் (இலக்குணனை
நோக்கி); ‘நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும்வளர்த்த தாதை
தன் - இன் மொழிகள் பேசி என்னைப் பாதுகாத்து என்னை நாளும்
வளர்த்துவந்த தந்தை தயரதனது; சொல் கடந்து - சொற்களை மீறி; அரசு
ஆள்வது- அரசு ஆட்சி செய்வது என்பது; எற்கு - எனக்கு; தக்கது
அன்று - தகுதியானசெயல் அன்று; (ஆனால் உனக்கோ) என் சொல்
கடந்தால் - (நீ தந்தையும் தாயும் என்றகருதும் ) என்னுடைய சொல்லை
மீறினால்; யாது உளது ஊற்றம்?’ - என்ன நன்மைவந்துவிடும் (ஒன்றும்
வராது); என்றான் -
‘என்னைத் தந்தையும் தாயும் என்று நீ கருதுவது உண்மையாயின்
என் சொல்லை மீறுவது உனக்கும் தகாது’ என்று கூறுவதாகக் கருத்துக்
கொள்ளல் வேண்டும். ‘ஆல்’அசை. 136