நகர் நீங்கு படலம் - 1765

1765.
‘வன் மாயக் கைகேசி,
வாக்கால், என்தன் உயிரை
முன் மாய்விப்பத் துணிந்தா
ளேனும், கூனி மொழியால்,
தன் மா மகனும் தானும்
தரணி பெறுமாறு அன்றி,
என் மா மகனை, “கான் ஏகு”
என்றாள்; என்றாள்ழு என்றான்.
‘வன் மாயக் கைகேசி, வாக்கால் என்தன் உயிரை முன்
மாய்விப்பத் துணிந்தாளேனும் -வலிய வஞ்சனை உள்ள கைகேயி தன்
சொல்லால் என் உயிரை முன்னால் அழிக்கத் துணிந்தாள்ஆனாலும்;
கூனி மொழியால் - கூனியின் துர்ப் போதனையால்; தன் மா மகனும்
தானும்தரணி பெறுமாறன்றி - தன் சிறந்த மகனாகிய பரதனும்,
அவளும் ஆட்சியைப் பெறுவது அல்லாமல்; என் மா மகனை - என்
சிறந்த மகனாகிய இராமனை; ‘கான் ஏகு’ என்றாள்; என்றாள் -
காட்டிற்குச் செல் என்று சொன்னாள்;’ என்றான் -.
கூனி மொழியால்தான் கைகேயி வரம் கேட்டாள் என்பதைத் தசரதன்
உணர்ந்தமை இதனால்புலப்படுகிறது. முன் கைகேசி சூழ்வினைப் படலத்து
‘பொய்ந்நிலையோர்கள் புணர்த்த வஞ்சம்உண்டோ’ என்ற தசரதன்
கேள்விக்கு, ‘எனக்கு வந்து தீயோர் இசைத்ததும் இல்லை’ என்ற கைகேயி
பதில் கூறினாள். ஆயினும் (1512, 1513) தசரதன் கூனியால்தான் கைகேயி
மனம் மாறினாள்என்பதை உணர்ந்தபடியை அங்குக் கூறாது விட்ட கம்பர்
இங்கே அவனால் அது உணரப்பட்டபடியைச்சொன்னார் எனக் கொள்க. 71