நகர் நீங்கு படலம் - 1753

1753.
‘நெகுதற்கு ஒத்த நெஞ்சும்,
நேயத்தாலே ஆவி
உகுதற்கு ஒத்த உடலும்,
உடையேன்; உன்போல் அல்லேன்;
தகுதற்கு ஒத்த சனகன்
தையல் கையைப் பற்றிப்
புகுதக் கண்ட கண்ணால்,
போகக் காணேன்' என்றான்.
‘நெகுதற்கு ஒத்த நெஞ்சும் - உருகுதற்குப் பொருந்திய மனமும்;
நேயத்தாலே-அன்பினால்; ஆவி உகுதற்கு ஒத்த உடலும் உடையேன்-
உயிர் விடுதற்குப் பொருந்தியஉடலையும் உடையவன் யான்; உன்போல்
அல்லேன் - உன்னைப்போல் வன்மனமும், வலியஉடலும்
உடையேனல்லேன்; தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றி -
தகுதிக்கு ஒத்தசனக ராசனுக்கு மகளாகிய சானகியின் கையைப் பிடித்துக்
கொண்டு; புகுதக் கண்ட கண்ணால் -அயோத்தி நகருக்குள் (நீ)
புகுவதைப் பார்த்த கண்களால்; போகக் காணேன்'-(அயோத்தியைவிட்டுக்)
காடு செல்வதைக் காண மாட்டேன்;' என்றான்-.
‘ஏ' காரம் அசை. தன் நிலை இவ்வாறாகவும் இராமன் வனமேத்
துணிந்தமை பற்றி‘உன்போல் அல்லேன்' என்று அவனை வன் மனமும்
வல் உடலும் உடையவனாகக் குறித்தான்தயரதன். 59