நகர் நீங்கு படலம் - 1752

1752.
‘பொன்னின் முன்னம் ஒளிரும்
பொன்னே! புகழின் புகழே!
மின்னின் மின்னும் வரிவில்
குமரா! மெய்யின் மெய்யே!
என்னின் முன்னம் வனம் நீ
அடைதற்கு, எளியேன் அல்லேன்;
உன்னின் முன்னம் புகுவேன்,
உயர் வானகம், யான்' என்றான்.
‘பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! - பொன்னுக்கு
மேற்பட்டுப்பிரகாசிக்கின்ற பொன் போன்றவனே; புகழின் புகழே! -
புகழுக்குப் புகழானவனே!; மின்னில் மின்னும் வரிவில் குமரா! - மின்னலைப் போல் விட்டு விளங்கும் கட்டமைந்தவில்லை உடைய
குமரனே; மெய்யின் மெய்யே! - உண்மையின் நிலைபேறே; என்னின்
முன்னம் - எனக்கு முற்பட்டு; நீ வனம் அடைதற்கு- நீ காடு புகுவதற்கு;
யான்எளியேன் அல்லேன் - நான் எளிமை உடையவன் அல்லன்;
உன்னின் முன்னம் - உனக்குமுன்னால்; உயர் வானகம் புகுவேன்!-
உயர்ந்த விண்ணை அடைவேன்;' என்றான்-.
‘கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைத் துறந்து நானும்,
வானகமே மிக விரும்பிப்போகின்றேன். மனுகுலத்தார் தங்கள் கோவே'
என்ற (திவ்ய.738) குலசேகராழ்வார் பாசுரமும்காண்க. 58